என் மலர்
செய்திகள்

கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்:
தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு இன்று காலை இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நாடு தழுவிய எதிர்ப்பு நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பாரதி தலைமை தாங்கினார்.
இதில் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் மகேந்திரன், மாநில குழு உறுப்பினர்கள் திருஞானம், பக்கிரிசாமி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் மீதான விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசு இதன் மீதான விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
முன்னதாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் மாட்டு வண்டிகளில் இன்று தலைமை தபால் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தின் போது மாட்டுவண்டிகளை முன்னே நிறுத்தியும், காலி சிலிண்டர் ஒன்றை நடுவில் வைத்து கொண்டு அதற்கு பூ மாலை போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.






