search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகள், நெசவாளர்களுக்கு 110 விதியின் கீழ் முதல்வர் பல்வேறு அறிவிப்புகள்
    X

    விவசாயிகள், நெசவாளர்களுக்கு 110 விதியின் கீழ் முதல்வர் பல்வேறு அறிவிப்புகள்

    தமிழக சட்டசபையில் வேளாண்மை மற்றும் கைத்தறி துறை மானியக்கோரிக்கை விவாதத்தின் போது, 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். #TNAssembly
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது விதியின் அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:-

    உடல்நலத்துக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களையும் வழங்கக்கூடிய சோளம், கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, வரகு, பனிவரகு மற்றும் குதிரைவாலி போன்ற சிறுதானியங்களின் தேவை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

    எனவே, சிறுதானியப் பயிர்களின் உற்பத்தியை உயர்த்தும் வகையில், விதை உற்பத்தி மற்றும் விநியோகம், தொகுப்பு செயல் விளக்கம், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை, சிறுதளைகள் விநியோகம் போன்ற பணிகளுக்காக, நடப்பாண்டில் 6 கோடியே 62 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும்.

    வாழை சாகுபடியில் சிக்கன நீர் மேலாண்மைக்காக நடப்பாண்டில் வாழை சாகுபடி மேற்கொள்ளப்படும் 10,000 ஏக்கர் பரப்பளவில் நுண்ணீர்ப் பாசன முறையினை அமைப் பதற்கு விவசாயிகளுக்கு மானியமாக 27 கோடியே 83 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

    காய்கறிகளை பசுமைக் குடில், நிழல் வலைக்குடில் போன்ற பாதுகாக்கப்பட்ட சூழலில் பயிரிடுதல், ஏறு கொடிகள் மற்றும் பற்று கொடிகளான காய்கறி மற்றும் பழங்களுக்கு ஆதாரமாக பந்தல் அமைத்தல், நிலப்போர்வை அமைத்தல் போன்ற தொழில்நுட்பங்களை மேற்கொள்ள 10 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்.

    கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்கும் பொருட்டு, வரும் பொங்கல் 2019 முதல் ஜுன் மாதம் வரை கூடுதல் உற்பத்தி திட்டம் வழங்கப்படும்.

    மொத்தமுள்ள பெடல் தறிகளில் விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 6 மாதங்களுக்கு ஏற்கனவே உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டு வரும் 9,692 பெடல் தறிகள் போக எஞ்சிய 1,558 பெடல் தறிகளுக்கு மேற்படி 6 மாத காலம் கூடுதல் உற்பத்தி திட்டம் வழங்கப்படும்.

    விலையில்லா சீருடை வழங்கும் திட்டத்தின் கீழ் உற்பத்தியில் ஈடுபடுத்தப் பட்டு வரும் 6,975 பெடல் தறிகள் போக எஞ்சிய 4,275 பெடல் தறிகளுக்கு பிப்ரவரி மாதம் முதல் ஜுன் மாதம் வரை 5 மாதங்களுக்கு விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் கூடுதல் உற்பத்தி திட்டம் வழங்கப்படும்.

    ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் வேலை வாய்ப்பின்றி இருக்கும் மொத்தமுள்ள 11,250 பெடல் தறிகளுக்கும் விலையில்லா வேட்டி-சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு மாதத்திற்கு கூடுதல் உற்பத்தி திட்டம் வழங்கப்படும். இதற்காக ஆண்டொன்றுக்கு அரசுக்கு 15 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.

    ஜவுளித் தொழிலின் வளர்ச்சியை தமிழ்நாட்டில் மேலும் ஊக்குவிக்கும் விதமாக, நடப்பாண்டில் தமிழ்நாடு அரசின் சார்பாக கோயம்புத்தூரிலுள்ள கொடிசியா அரங்கில் பன்னாட்டு ஜவுளிக் கண்காட்சி 2 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும்.

    தமிழ்நாடு அரசின் விலையில்லா சீருடைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சீருடைத் துணிகளை பதனீடு செய்வதை முக்கிய பணியாக கொண்டு தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

    சீருடைத் துணிகளை பதனிடுவதன் மூலம் இவ்வாலை பிப்ரவரி முதல் ஆகஸ்ட் முடிய 7 மாதங்கள் முழுமையாக செயல்படுகிறது. மீதமுள்ள 5 மாதங்கள் பதனிடுவதற்கு போதுமான துணி இல்லாததால் குறைந்த திறனுடன் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையை கருத்திற் கொண்டு இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சீருடைத் துணி பதனீட்டு பணி இல்லாத காலங்களில் தொடர் வேலை வாய்ப்பு வழங்கும் நோக்குடன் ஆலையை தொடர்ந்து லாபத் தில் இயக்க செய்யவும், ஒரு தொகுதிக்கு 2 டன் வீதம் 60 எஸ் கோம்டு நூல் சாயமிடும் திறன் கொண்ட சாயமிடும் அலகு 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக் கப்படும்.

    தமிழ்நாடு, தேசிய அளவில் வெண்பட்டு உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. தமிழ்நாட்டில் தலா 20 லட்சம் பட்டு முட்டை களை பதனம் செய்யும் திறன் கொண்ட இரண்டு பல்நிலை குளிர் பதன அலகுகள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலும், கிருஷ்ணகிரியிலும் செயல்பட்டு வருகின்றன.

    வெண்பட்டு முட்டை உற்பத்தியினை அதிகரித்து அதனை பதனப்படுத்திட, மேலும் ஒரு, 20 லட்சம் பட்டு முட்டைகளைப் பதனம் செய்யும் திறன் கொண்ட பல்நிலை குளிர்பதன அலகு, ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்படும்.

    தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பட்டுக் கூடுகளை முழுவதுமாக பயன்படுத்தி பட்டு நூல் உற்பத்தி செய்ய, போதுமான பட்டு நூற்பு அலகுகள் இல்லை என்பதால், பட்டுக் கூடுகளுக்கு பிந்தைய பட்டு நூற்பு பிரிவினை வலுப்படுத்தும் நோக்கில் நடப்பாண்டில் பட்டு நூற்பு அலகுகளை நிறுவிட மாநில அரசின் பங்காக நிதியுதவி பின்வருமாறு வழங்கப்படும்.

    400 முனைகள் கொண்ட மூன்று தானியங்கி பட்டு நூற்பு அலகுகள் நிறுவிட, ஒரு கோடியே 5 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் வழங்கப் படும்.

    200 முனைகள் கொண்ட ஒரு தானியங்கி பட்டு நூற்பு அலகினை நிறுவிட, 19 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஒரு தானியங்கி டூபியான் பட்டு நூற்பு அலகினை நிறுவிட, 11 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

    100 முனைகள் கொண்ட பல்முனை பட்டு நூற்பு அலகுகள் 25 நிறுவிட, மாநில அரசின் பங்காக ஒரு கோடியே 6 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

    இரண்டு தனியார் பட்டு முறுக்கேற்றும் அலகுகளும், ஒரு அரசு பட்டு முறுக்கேற்றும் அலகும் நிறுவிட, 10 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பதை இப்பேரவைக்கு தெரிவித்துக் கொண்டு அமர்கின்றேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
    Next Story
    ×