search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியாங்குப்பத்தில் அடுத்தடுத்து 3 கோவில்களில் உண்டியல் பணம் கொள்ளை
    X

    அரியாங்குப்பத்தில் அடுத்தடுத்து 3 கோவில்களில் உண்டியல் பணம் கொள்ளை

    அரியாங்குப்பத்தில் அடுத்தடுத்து 3 கோவில்களில் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    அரியாங்குப்பம்:

    அரியாங்குப்பத்தில் பூரணாங்குப்பம் வீதியில் செடிலாடும் செங்கழு நீரம்மன் கோவில் உள்ளது. அதே பகுதியில் திரவுபதி அம்மன் கோவிலும், அந்த கோவில் வளாகத்தில் பார்த்தசாரதி கோவிலும் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவில்களில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் பிரமோற்சவ விழா நடந்தது.

    விழா முடிந்ததும் இந்த கோவில்களில் உண்டியல் காணிக்கை பணம் திறக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் இந்த 3 கோவில்களிலும் இருந்த உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    மேலும் கோவில்களில் இருந்த பீரோக்களை உடைத்து அதில் வைத்திருந்த பூஜை பொருட்களையும் அவர்கள் திருடி சென்று விட்டனர்.

    இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி கோவில் அறங் காவலர் குழுவினர் அரியாங்குப்பம்போலீசில் புகார் செய்தனர்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வர வழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர்.

    அடுத்தடுத்து 3 கோவில்களில் உண்டியல் பணம் கொள்ளையடிப்பு சம்பவம் அப்பகுதி மக்களையும், பக்தர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

    இதற்கிடையே கோவில்களில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பல் அந்த பகுதியில் இருந்த மின்துறை அலுவலகத்துக்குள்ளும் புகுந்தது. அங்கு மின்கட்டண வசூல் பணத்தை வைத்திருக்கும் பணப் பெட்டியை உடைத்துள்ளனர். ஆனால், அதில் பணம் ஏதும் இல்லாததால் ஏமாற்றத்துடன் சென்று விட்டனர்.

    Next Story
    ×