search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரீத்தி என்ற முனிசா
    X
    பிரீத்தி என்ற முனிசா

    எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணியிடம் பணப்பை திருடிய திருநங்கை கைது - ரூ.1 லட்சம் பறிமுதல்

    பெரம்பூர் அருகே சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணியிடம் இருந்து பணப்பை திருடிய திருநங்கையை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
    பெரம்பூர்:

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து சென்னை பெரம்பூர் வழியாக பாட்னா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மதியம் பெரம்பூர் ரெயில் நிலையத்துக்கு வந்தது. பின்னர் அங்கிருந்து ரெயில் புறப்பட்டு சென்றது. அப்போது ரெயிலில் இருந்த பயணிகளிடம் திருநங்கை ஒருவர் பணம் கேட்டார். அந்த ரெயிலில் பயணம் செய்த விசாகப்பட்டினத்தை சேர்ந்த சோனா சந்துரு என்பவரிடம் அவர் பணம் கேட்டு தொந்தரவு செய்தார்.

    இதனால் அவருக்கு சோனா சந்துரு பணம் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த திருநங்கை, அவரிடம் இருந்த பணப்பையை நூதன முறையில் திருடிக்கொண்டு கொருக்குப்பேட்டை ரெயில் நிலையத்தில் இறங்கிவிட்டார்.

    திருவொற்றியூர் அருகே ரெயில் சென்றபோது பணப்பை காணாமல் போனதை கண்டு சோனா சந்துரு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து ரெயிலில் இருந்து இறங்கிய அவர் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார். அதில், ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் வைத்திருந்த கைப்பையை திருநங்கை திருடிச்சென்றதாக கூறி இருந்தார்.

    இதுகுறித்த புகாரின்பேரில், கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் திருநங்கையை தேடி வந்தனர். இந்தநிலையில், சோனா சந்துருவிடம் பணப்பையை திருடிச்சென்றது திருவொற்றியூர் மாட்டு மந்தையை சேர்ந்த திருநங்கை பிரீத்தி என்ற முனிசா (வயது 43) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்தை பறிமுதல் செய்து புழல் சிறையில் அடைத்தனர். 
    Next Story
    ×