search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமங்கலம் அருகே மனைவியுடன் சென்ற கணவர் குத்திக்கொலை
    X

    திருமங்கலம் அருகே மனைவியுடன் சென்ற கணவர் குத்திக்கொலை

    மனைவியுடன் சென்ற கணவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். ஒருதலைக் காதலால் இந்த விபரீத செயலில் இறங்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியைச் சேர்ந்த வேலு மகன் கருப்பையா (24). இவர் மைசூரில் தேயிலை ஏஜெண்டாக உள்ளார்.

    இவருக்கும், திருமங்கலத்தை அடுத்த கண்டு குளத்தைச்சேர்ந்த மாரநாடு மகள் திவ்யாவுக்கும் (20) கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    அதன் பிறகு மைசூரில் கணவருடன் வசித்து வந்தார். தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு கருப்பையாவும், திவ்யாவும் ஊருக்கு வந்தனர். நேற்று மாலை 2 பேரும் மோட்டார் சைக்கிளில் திருமங்கலம் காய்கறி மார்க்கெட்டுக்கு வந்தனர்.

    அங்கு காய்கறிகள் வாங்கிவிட்டு கண்டுகுளம் நோக்கி புறப்பட்டனர். தாளமுத்தையா கோவில் அருகே சென்ற போது ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்து வழிமறித்தார்.

    அவர் கண் இமைக்கும் நேரத்தில் கருப்பையா மற்றும் திவ்யாவை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    ரத்த வெள்ளத்தில் சாய்ந்த கணவன்-மனைவி இருவரும் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கருப்பையா பரிதாபமாக இறந்தார். திவ்யா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து திருமங்கலம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் கத்தியால் குத்திவிட்டு தப்பியவர், திவ்யாவின் வீடு அருகே வசிக்கும் பாலமுருகன் (23) என தெரியவந்தது. போலீசார் அதிரடியாக செயல்பட்டு அவனை கைது செய்தனர்.

    திவ்யாவை ஒருதலையாக காதலித்ததாவும், அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்ததால் தன்னால் தாங்கிக் கொள்ள முடியாததால் கத்தியால் குத்தியதாகவும் பாலமுருகன் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

    திருமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில், கடந்த சில ஆண்டுகளாகவே ஒரு தலைக்காதல் சம்பவம் கொலையில் முடிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருதலைக்காதலில் மாணவி மீது திராவகம் ஊற்றப்பட்டதில் அவர் பலியானார்.

    திருமங்கலம் அருகே உள்ள மேலக்கோட்டையைச் சேர்ந்த சோலைராஜா மனைவி மணிமாலா (27). கணவரை பிரிந்து தனியாக வாழும் இவர், தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று வேலை முடிந்து மணிமாலா வீட்டுக்கு திரும்பியபோது அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (22) என்பவர் வழிமறித்து கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த மணிமாலா சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×