என் மலர்tooltip icon

    செய்திகள்

    கணியம்பாடியில் தேரில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
    X

    கணியம்பாடியில் தேரில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

    வேலூர் அடுத்த கணியம்பாடியில் தேரில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கண்ணமங்கலம்:

    வேலூர் அடுத்த கணியம்பாடி என்.எஸ்.கே. நகரை சேர்ந்தவர் அண்ணாமலை. இவர் மகன் கோபி (வயது 28). பெங்களூருவில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். கோபிக்கு மோனிஷா என்ற மனைவி உள்ளார். குழந்தை இல்லை.

    நேற்று முன் தினம் என்.எஸ்.கே. நகரில் செல்லியம்மன் கோவில் திருவிழா நடந்தது. பெங்களூருவில் இருந்து கோபி மனைவியுடன் திருவிழாவிற்கு வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு மாட்டுவண்டியில் ஜோடித்த சிறிய தேரில் செல்லியம்மன் வீதிஉலா நடந்தது. இதில் கோபி உள்பட அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து, கோவில் அருகே அம்மன் பவனி வந்த மாட்டுவண்டி தேர் நிலை நிறுத்தப்பட்டது. நேற்று மாலை அந்த தேரை பிரித்து எடுப்பதற்காக கோபி தேரை தள்ளி சென்றார்.

    அப்போது, தாழ்வாக சென்ற மின்சார கம்பி தேர் மீது உரசியது. இதில் தேரில் மின்சாரம் பாய்ந்தது. தேரை தள்ளிச் சென்ற கோபி மீதும் மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டார்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர், வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கோபி உயிரிழந்தார்.

    இதுகுறித்து, வேலூர் தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    Next Story
    ×