search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஜினிகாந்த் வீட்டின் முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்
    X
    ரஜினிகாந்த் வீட்டின் முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்

    ரஜினி கருத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது- வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு

    தூத்துக்குடி கலவரம் தொடர்பாக ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #Rajinikanth #ThoothukudiFiring
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி கலவரம் மற்றும் துப்பாக்கிச்சூடு பற்றி நேற்று தெரிவித்த கருத்துக்கள் மிகப்பெரிய அளவில் சலசலப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.

    துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினரையும், காயம் அடைந்தவர்களையும் சந்தித்து ஆறு தல் கூறி, நிதி உதவியையும் அளித்த பிறகு தூத்துக்குடியிலும், சென்னையிலும் நிருபர்களுக்கு பேட்டியளித்த ரஜினி ஆவேசமாக காணப்பட்டார்.

    ரஜினி கூறுகையில், “தூத்துக்குடியில் நடந்த போராட்டத்துக்கு வி‌ஷக் கிருமிகள், சமூக விரோதிகள் ஊடுருவலே காரணம். போலீசார் மீது கை வைத்தவர்களை சும்மா விடக்கூடாது.

    போலீசை தாக்கியவர்கள், பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியவர்கள் சமூக விரோதிகள்தான். இப்படி தொடர்ந்து போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு சுடுகாடாக மாறி விடும்” என்றார்.

    ரஜினியின் இந்த கருத்துக்கு பரவலாக கடும் எதிர்ப்பும் அதிருப்தியும் தோன்றியுள்ளது. நச்சுக் காற்றால் பாதிக்கப்பட்டு, நோய் தாக்குதலுக்கு உள்ளாகி, வாழ்வாதாரத்தையே இழந்து விடுவோமோ என்ற பரிதவிப்பில் இருக்கும் தூத்துக்குடி மற்றும் சுற்றுப் பகுதி மக்களுக்கு ரஜினி தெரிவித்துள்ள கருத்துக்கள் கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. “ஆறுதல் சொல்ல வந்தவர் ஏன் இப்படி எங்களுக்கு எதிராகப் பேசுகிறார்?” என்ற குரல்கள் கேட்கத் தொடங்கி உள்ளன.

    ரஜினி ரசிகர்களும், ரஜினி மன்றத்தினரும் கூட “சமூக விரோதிகள்” என்ற பேச்சில் உடன்பாடு இல்லாமல் தவிக்கிறார்கள். ரஜினியின் கருத்துக்கு பா.ஜ.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும், சமூக அமைப்புகளும் பலத்த கண்டனத்தை தெரிவித்துள்ளன.

    குறிப்பாக தமிழ்நாடு சுடுகாடாக மாறி விடும் என்ற ரஜினியின் ஆவேசவார்த்தை ஏற்கனவே மனவேதனையில் இருக்கும் சாமானிய மக்கள் மனதில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல மாறி உள்ளது. மக்களின் இத்தகைய மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் இன்று பல்வேறு கட்சித் தலைவர்களும் ரஜினிக்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.

    இதன் காரணமாக நடிகர் ரஜினிகாந்துக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ரஜினி தனது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், ரஜினியை கைது செய்ய வேண்டும் என்றும் எதிர்ப்பு குரல்கள் எழத்தொடங்கி உள்ளன.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக கூறுகையில், “போராட்டம் இல்லாத வாழ்க்கையே இல்லை. ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி பெற, போராட்டம் மூலம் தானே தீர்வு காணப்பட்டது. இது ரஜினிக்கு தெரியாதா? அவர் போராட்டக்காரர்களை சமூக விரோதிகள் என்கிறார். அந்த சமூக விரோதிகளை அடையாளம் காட்ட ரஜினி தயாரா?” என்றார்.



    சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறுகையில், “வாழ்க்கையே போராட்டம் தானே. போராட வேண்டிய சூழ்நிலை உருவானால் போராடி தானே ஆக வேண்டும். ரஜினியே போராட வேண்டும் என்றுதானே புத்தாண்டு வாழ்த்தில் சொன்னார். இப்போது சமூக விரோதிகள் என்கிறார். அந்த சமூக விரோதிகளை அடையாளம் காட்டாவிட்டால் ரஜினியை தேசத் துரோக சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்” என்றார்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், “எங்கள் போராட்டத்தை தடுக்க நினைத்தால் எரிமலை வெடிக்கும். போராட்டம் பற்றிய எந்த அரிச்சுவடியும் ரஜினிக்கு தெரியாது. தமிழகம் சுடுகாடாக மாறாமல் இருக்கவே போராட்டம் நடத்தி வருகிறோம். புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் ரஜினி இது தெரியாமல் பேசி, கோடிக்கணக்கான மக்களின் மனதை காயப்படுத்தி உள்ளார்” என்றார்.

    மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “போராட்டக்காரர்களை சமூக விரோதிகள் என்று ரஜினி சொல்வது வி‌ஷம கருத்து. தன்னெழுச்சியாக நடந்த மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி உள்ளார். இதன் மூலம் ரஜினி பா.ஜ.க. வின் குரலை எதிரொலித்துள்ளார். பாசிச சக்திகளின் ஏஜெண்டு போல செயல்படும் நடிகர் ரஜினி காந்தை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும்” என்றார்.


    விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறுகையில், “ரஜினியின் குரல் கார்ப்பரேட் நிறுவனங்களின் குரலாக உள்ளது. சில மதவாத சக்திகளும் இதில் ரஜினிக்கு யோசனை கூறி இருக்கலாம். மக்கள் போராட்டம் நடத்தியபோது களத்துக்கு போகாத ரஜினி, இப்போது அங்கு சென்று சமூக விரோதிகள் என்கிறார். பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசும் ரஜினி நிதானம் இழந்துள்ளார்.

    இமயமலைக்கு சென்று தியானம் இருக்கும் பாவாவின் சீடரான அவர் ஒரு சாதாரண கேள்விக்கு உணர்ச்சிவசப்படுவது ஆச்சரியம் அளிக்கிறது. சமூக விரோதிகள் என்று சொன்னதன் மூலம் அவர் தூத்துக்குடி மக்களை கொச்சைப்படுத்தி உள்ளார். அவருக்கு இருந்த நன்மதிப்பு போய் விட்டது” என்று கூறி உள்ளார்.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடியில் நடந்தது மண்ணுக்கான போராட்டம். சிறுவர் - சிறுமிகள் கூட போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் சமூக விரோதிகள் என்றால் குடும்பத்தோடா களத்துக்கு வருவார்கள்? மக்கள் இப்படி போராடினால் வளர்ச்சி இருக்காது என்பது பைத்தியக்காரன் சொல்லும் வாதம்.

    ஸ்டெர்லைட் போராட்டம் பொழுதுபோக்குக்காக நடக்கவில்லை. கற்பி, புரட்சி செய், ஒன்று சேர் என்று மாமேதை அம்பேத்காரே கூறியுள்ளார். ஆனால் ரஜினியோ, போராட்டக்காரர்களை சமூக விரோதிகள் என்கிறார். மக்களுக்கு ஆதரவாக இருப்பதற்கு அப்பாவி மக்களை சுட்டுக்கொன்ற போலீசுக்கு ரஜினி ஆதரவு கொடுப்பது ஏன்? போராடுபவர்களுக்கு ஆதரவு கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. கொச்சைப்படுத்தாதீர்கள். அவரது இந்த அதிகார குரல் வெட்கக்கேடான குரல்” என்று கூறியுள்ளார்.

    அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி திரை உலகப் பிரமுகர்களும் ரஜினியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இயக்குனர் அமீர் கூறுகையில், “ரஜினி ஆவேசப்பட வேண்டியதில்லை. தன்னை பா.ஜ.க. என்று சொல்லி விட்டால் பிரச்சனை தீர்ந்து விடும்” என்று கூறியுள்ளார்.

    நடிகர் மயில்சாமி கூறுகையில், “தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டம் சுதந்திர போராட்டம் மாதிரிதான். அதை வரவேற்காமல் ரஜினி கொச்சைப்படுத்தி விட்டார்” என்றார்.

    ரஜினிக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து எதிர்ப்பு வந்து கொண்டே இருக்கிறது. வெளிநாடு வாழ் தமிழர்களும் ரஜினிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான மக்கள் ரஜினிக்கு எதிரான தங்களது மன குமுறலை வெளிப்படுத்தியபடி உள்ளனர்.


    இதையடுத்து ரஜினிக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்க சென்னை போலீசார் முடிவு செய்தனர். நேற்றிரவே ரஜினிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    கதீட்ரல் சாலையில் இருந்து ரஜினி வீடு இருக்கும் போயஸ் கார்டனுக்கு திரும்பும் வழியில் சுமார் 50 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இதே போல ரஜினி வீட்டுக்கு திரும்பும் மற்றொரு வழியிலும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சாலைகளில் தடுப்புகளை அமைத்துள்ளனர்.  ரஜினியின் வீட்டு முன்பும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    ஏதேனும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ரஜினி வீட்டின் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை கருத்தில் கொண்டே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #Rajinikanth #ThoothukudiFiring 
    Next Story
    ×