search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலவச பயணம் என்பதால் மக்கள் கூட்டத்தால் திக்குமுக்காடிய மெட்ரோ ரெயில்
    X

    இலவச பயணம் என்பதால் மக்கள் கூட்டத்தால் திக்குமுக்காடிய மெட்ரோ ரெயில்

    இலவச பயணம் என்பதால் 3-வது நாளாக மக்கள் கூட்டத்தால் மெட்ரோ ரெயில் திக்குமுக்காடியது. #MetroTrain
    சென்னை:

    சென்னை நேரு பூங்கா-சென்டிரல் மற்றும் சின்னமலை-ஏ.ஜி.டி.எம்.எஸ். இடையிலான மெட்ரோ ரெயில் போக்குவரத்தை 25-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த புதிய வழித்தட மெட்ரோ ரெயில் போக்குவரத்து குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த 3 நாட்களுக்கு இலவச பயணத்துக்கு நிறுவனம் அனுமதித்தது.

    இதனால் 25, 26-ந் தேதிகளில் ஏராளமான மக்கள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர். 3-வது நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், இலவச பயணத்தின் கடைசி நாள் என்பதாலும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்ய மக்கள் கூட்டம் அலைமோதியது. சிறுவர்-சிறுமிகள் குடும்பத்துடனும், இளைஞர்களும், இளம்பெண்களும் குழுக்களாகவும், குடும்பத்தினருடனும் அதிக அளவில் வந்து மெட்ரோ ரெயில் பயணத்தை மேற்கொண்டு குதூகலித்தனர்.



    கூட்டம் அலைமோதிய போதிலும், மெட்ரோ ரெயில் நிறுவன ஊழியர்கள் மற்றும் போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தி மக்கள் எளிமையாக பயணம் மேற்கொள்ள வழி செய்தனர். மெட்ரோ ரெயில் நடைமேடைக்கு வரும் நேரத்தில், ஒலிபெருக்கி மூலமாகவும் மக்களை ஒழுங்குபடுத்தி நெரிசல் இல்லாமல் ரெயிலில் ஏறுவதற்கு ஏற்பாடு செய்தனர். இலவச பயணம் என்பதால், சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகள் ரெயில்களில் பயணித்தனர்.



    சென்டிரல்-பரங்கிமலை வழித்தடத்தில் 9 ரெயில்களும், சென்டிரல்-விமான நிலையம் வழித்தடத்தில் 5 ரெயில்களும், விமான நிலையம்-ஏ.ஜி.டி.எம்.எஸ். வழித்தடத்தில் 6 ரெயில்களும் என 20 ரெயில்கள் இயக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் கூடுதலாக 5 ரெயில்கள் இயக்கப்படுவதாகவும், அந்த நேரத்தில் 4 நிமிடத்துக்கு ஒரு ரெயில் இயக்கப்படும் என்றும் மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    முதல் நாளான 25-ந் தேதி 50 ஆயிரம் பேரும், நேற்று முன்தினம் 1 லட்சத்து 20 ஆயிரம் பேரும் பயணித்துள்ளனர். நேற்று பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மெட்ரோ ரெயில் பயணம் குறித்து அரும்பாக்கத்தை சேர்ந்த இந்துஜா என்ற பிளஸ்-2 மாணவி கூறும்போது, ‘மெட்ரோ ரெயிலில் இலவசமாக பயணம் செய்யலாம் என்பதை ‘தினத்தந்தி’ பத்திரிகையில் காலையில் பார்த்ததுமே மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வது என முடிவு செய்தேன். மாலையில் எனது குடும்பத்துடன் அரும்பாக்கத்தில் இருந்து சென்டிரல் வரை மெட்ரோ ரெயில் பயணத்தை மேற்கொண்டேன். மிகவும் உற்சாகமாக உள்ளது. ரெயில் பெட்டியில் திருக்குறள் ஒட்டப்பட்டு இருப்பது பாராட்டுக்குரியது’ என்றார்.

    ஈக்காட்டுத்தாங்கலை சேர்ந்த ஜாஸ்மின்-விஜி தம்பதி கூறும்போது, ‘விமான நிலையம், எழும்பூர், சென்டிரல் ரெயில் நிலையங்கள் செல்வதற்கும் மிகவும் வசதியாக உள்ளது. இன்னும் கொஞ்சம் கட்டணம் குறைவாக இருந்தால் நடுத்தர மக்களுக்கும் வசதியாக இருக்கும். மெட்ரோ ரெயிலுக்குள் செல்போன் டவர் கிடைக்கவில்லை. டவர் கிடைக்க வழிசெய்தால் இன்னும் நன்றாக இருக்கும்’ என்றனர். 
    Next Story
    ×