search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் வருத்தம் அளிப்பதாக உள்ளது- தம்பிதுரை
    X

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் வருத்தம் அளிப்பதாக உள்ளது- தம்பிதுரை

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் வருத்தம் அளிப்பதாக உள்ளது என்று கிருஷ்ணகிரியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். #Thoothukudifiring #SterliteProtest #ThambiDurai
    கிருஷ்ணகிரி:

    துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நிருபரிடம் கூறியதாவது:-

    ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இந்த ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. ஆனால் அவர்கள் உச்சநீதிமன்றத்திற்கு சென்று ஆலையை திறக்க அனுமதி பெற்றனர். மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டதால்தான் இந்த ஆலையை மூட உத்தரவிட்டதாக அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா கூறினார்.

    அவரது வழியில் விவசாயிகளுக்கும் பொது மக்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் மக்கள் நலனுக்காக மட்டும் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. மக்கள் நலன் பாதிக்கும் எந்த திட்டத்தையும் செயல்படுத்தாது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக கூறி உள்ளார்.

    தூத்துக்குடியில் நடந்த சம்பவம் வேறு மாதிரியான ஒன்று. ஆகவேதான் தமிழக முதல்-அமைச்சர் அதற்கு உரிய நிவாரணம் வழங்கவும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடிக்கு அதிகாரிகள் முதலில் செல்வார்கள். அங்கு உள்ள நிலவரங்கள் குறித்து ஆய்வு செய்த பின்பு அமைச்சர்கள் சென்று அங்குள்ள மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப நிவாரணப் பணிகளை மேற்கொள்வார்கள்.

    தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு போடப்பட்டது குறித்து எனக்கு தெரியாது. இந்த துயர சம்பவம் எங்கள் எல்லோருக்கும் வருத்தமளிப்பதாக உள்ளது. எனவே தான் அதற்கு ஒரு நிவாரணம் தேடும் விதமாக அவர்களுக்கு உரிய உதவிகளை வழங்குவதாகவும், வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த சம்பவம் எங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.


    காவிரி பிரச்சனையில் ஒத்துழைக்க தயார் என்று குமாரசாமி கூறிவிட்டார். நீதிமன்றம் கூறியுள்ளபடி செயல்பட தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம் தண்ணீரை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. அதன்படி அவர் செயல்படுவார் என்று நம்புகிறோம்.

    கர்நாடகாவில் ஒரு மாநில கட்சியின் தலைவர்தான் முதல்-அமைச்சர் ஆகி உள்ளார். அங்கு மாநில கட்சியின் ஆட்சிதான் நடைபெறுகிறது. இந்தியாவில் அந்தந்த மாநில உணர்வுகளுக்கு ஏற்ப தான் தலைவர்கள் உருவாகி வருகிறார்கள். அதேபோல் தமிழகத்தை பொறுத்தவரையில் எந்த தேசியக்கட்சிக்கும் வாய்ப்பு கிடையாது. அ.தி.மு.க. தொடர்ச்சியாக ஆட்சி செய்யும்.

    தமிழகத்தைப் பொருத்த வரையில் திராவிட கட்சிகள் மட்டும் தான் ஆட்சி அமைக்கும் என்பதற்கு கர்நாடகா தேர்தலில் தேசிய கட்சி தலைவர்கள் யாரும் முதல்வராக வர முடியாததே எடுத்துக்காட்டு ஆகும். தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் இப்படித்தான் நடந்து கொண்டு வருகிறது.

    கூட்டாட்சி தத்துவத்தை ஏற்று அனைவரும்செயல்பட வேண்டும். அந்தந்த மாநிலத்தின் உரிமையை தர வேண்டும். மாநில கலாச்சாரத்தையும் மொழியையும் மதிக்க வேண்டும் என்பதுதான் பெரியார், அண்ணா ஆகியோரின் கொள்கையாகும். அந்த வகையில் தான் அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது.

    மாநில உரிமைகளை பெற்று அந்தந்த மொழிகளை காப்பது நம் கடமையாகும். தமிழ்நாடு, தமிழ்மொழி, தமிழினம் இவற்றை காக்க என்றென்றும் அ.தி.மு.க. போராடும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thoothukudifiring #SterliteProtest  #ThambiDurai
    Next Story
    ×