search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நித்திரவிளையில் செல்பி எடுத்தபோது கடல் அலையில் சிக்கி மாணவர் பலி
    X

    நித்திரவிளையில் செல்பி எடுத்தபோது கடல் அலையில் சிக்கி மாணவர் பலி

    நித்திரவிளையில் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்த மாணவர், செல்பி எடுக்கும்போது கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    நித்திரவிளை:

    நித்திரவிளையை அடுத்த கிடாரக்குழியை சேர்ந்தவர் ஜாண்சன். இவரது மனைவி ஸ்டெல்லா கிரேஸ். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஜாண்சனும், அவரது மனைவி மற்றும் குழந்தைகளும் மும்பையில் வசித்து வருகிறார்கள்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜாண்சன் இறந்துவிட்டார். அதன் பிறகு ஸ்டெல்லா கிரேஸ் குழந்தைகளுடன் மும்பையிலேயே வசித்து வந்தார். இவரின் மகன்கள் மும்பையில் படித்து வருகிறார்கள். தற்போது விடுமுறை விடப்பட்டதால் ஸ்டெல்லா கிரேஸ் 2 மகன்களுடன் சொந்த ஊரான கிடாரக்குழிக்கு வந்தார்.

    கடந்த வாரம் ஊருக்கு வந்த ஸ்டெல்லா கிரேசும், அவரது மகன்களும் நேற்று பொழியூர் கடற்கரைக்கு சென்றனர். அங்கு கடல் அலையை ரசித்தபடி இருந்தனர். பின்னர் அவர்கள் 3 பேரும் கடல் அலைகளில் அருகே நின்றபடி செல்போனில் செல்பி எடுத்தனர்.

    அப்போது திடீரென எழுந்த ராட்சத அலை ஸ்டெல்லா கிரேசையும், அவரது 2 மகன்களையும் இழுத்துச் சென்றது. அலையில் சிக்கிய மூவரும் அலறினர்.

    சத்தம் கேட்டு அப்பகுதியில் நின்ற மீனவர்கள் ஓடிச் சென்று அவர்களை காப்பாற்ற முயன்றனர். இதில் ஸ்டெல்லா கிரேசும் அவரது இளைய மகனும் மீட்கப்பட்டனர். மூத்த மகன் ஜோயல் அலையில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி நித்திரவிளை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இறந்து போன ஜோயலுக்கு 12 வயது ஆகிறது. அவர் 7-ம் வகுப்பு படித்து வந்தார். மும்பையில் இருந்து சொந்த ஊருக்கு வந்தபோது கடல் அலையில் சிக்கி மாணவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    Next Story
    ×