search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கியில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்ட 500 ரூபாய் கள்ள நோட்டுகள் - போலீசார் விசாரணை
    X

    வங்கியில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்ட 500 ரூபாய் கள்ள நோட்டுகள் - போலீசார் விசாரணை

    திருவாரூர் வங்கியில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு 500 ரூபாய் கள்ள நோட்டுகள் அனுப்பப்பட்டுள்ளன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவாரூர்:

    சென்னையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் செல்வராஜ், திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    திருவாரூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கி கிளையில் இருந்து கடந்த 15-ந் தேதிக்கு முன்பாக சென்னை இந்திய ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பணத்தில், 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 10 எண்ணிக்கையில் இருந்தது கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கள்ள நோட்டுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த புகாரின் பேரில் திருவாரூர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், திருவாரூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கி கிளையில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட பணத்தில், கள்ள நோட்டுகள் சென்று இருப்பது உண்மை என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து நாகப்பட்டினம் குற்ற வழக்கு தொடர்புதுறை உதவி இயக்குனரிடம் இருந்து கள்ள நோட்டு சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யலாம் என கருத்துரு பெறப்பட்டது. இதனை தொடர்ந்து திருவாரூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராசு, கள்ள நோட்டு சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்தார். கள்ள நோட்டுகள் அந்த வங்கிக்கு எவ்வாறு வந்தது? யாருடைய கணக்கில் இருந்து செலுத்தப்பட்டது? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருவாரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
    Next Story
    ×