search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணகிரி - திண்டிவனம் வரை தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு ரூ.262.67 கோடி ஒதுக்கீடு
    X

    கிருஷ்ணகிரி - திண்டிவனம் வரை தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு ரூ.262.67 கோடி ஒதுக்கீடு

    கிருஷ்ணகிரி - திண்டிவனம் வரை தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு ரூ.262 கோடியே 67 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அசோக்குமார் எம்.பி. கூறினார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சாலை பாதுகாப்பு கண்காணிப்புக்குழு கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் கண்காணிப்புக்குழுத் தலைவர் கே.அசோக்குமார் தலைமையில் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் கதிரவன், போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், பர்கூர் சி.வி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அசோக்குமார் எம்.பி. பேசியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மற்றும் 6 வழிச்சாலையில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதை தடுக்க விபத்து நடைபெறும் இடங்களில் சாலையை அகலப்படுத்துதல், மேம்பாலங்கள், உயர்மட்ட நடைபாதைகள், மின் கோபுரங்கள் அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி முதல் திண்டிவனம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு ரூ.262 கோடியே 67 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் பணிகள் தொடங்க உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உறுதி அளித்துள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 5 தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் உள்ள 191.20 கிலோ மீட்டர் சாலையில் விபத்துகள் ஏற்படாத வகையில் மேம்பாலங்கள், உயர் மின்கோபுரங்கள், சர்வீஸ் சாலைகளில் வேகத்தடைகள் போன்ற பணிகள் விரைந்து மத்திய அரசின் அனுமதி பெற்று செய்து தரப்படும். தேசிய நெடுஞ்சாலைகளில் தேவையான இடங்களில் விபத்து அவசர சிகிச்சை பிரிவு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, தேசிய நெடுஞ்சாலை திட்ட அலுவலர்கள் சிவாஜி, நாராயணன், ரிலையன்ஸ் மேலாளர் முத்துகுமார், மண்டல போக்குவரத்து ஆணையர் செந்தில்நாதன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அசோகன், செந்தில்வேலவன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கண்ணன் (கிருஷ்ணகிரி), சங்கர் (தேன்கனிக்கோட்டை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×