search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் மதுபான கடையை மதியம் 2 மணிக்கு திறந்தால் என்ன? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
    X

    டாஸ்மாக் மதுபான கடையை மதியம் 2 மணிக்கு திறந்தால் என்ன? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி

    டாஸ்மாக் மதுபானக் கடையை 12 மணிக்கு திறப்பதற்கு பதில் மதியம் 2 மணிக்கு திறந்தால் என்ன? என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
    சென்னை:

    டாஸ்மாக் மதுபானக் கடை தொடர்ந்த வழக்குகளை நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

    வடசென்னை பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள், அதில் உள்ள பார்கள் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுவதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. சட்டவிரோதமாக செயல்படும் இந்த மதுபானக் கடைகள், பார்கள் மீது நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று தமிழக டி.ஜி.பி.க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இதன்படி, தமிழக டி.ஜி.பி. அறிக்கை தாக்கல் செய்தார். அதில், கடந்த ஏப்ரல் 26 மற்றும் 27-ந் தேதிகளில் தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக செயல்படும் பார்கள் குறித்து சோதனை நடத்தப்பட்டு, 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 81 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 6 மாதங்களில் இதுபோல சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக 3 ஆயிரத்து 613 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3 ஆயிரத்து 255 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறியிருந்தார்.

    இந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    எதற்காக டாஸ்மாக் மதுபானக் கடையை மதிய உணவு நேரத்துக்கு முன்பாக, அதாவது 12 மணிக்கு ஏன் திறக்கப்படுகிறது? என்பதை எங்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. எனவே, கீழ் கண்ட கேள்விகளுக்கு தமிழக அரசு பதில் அளிக்கவேண்டும்.

    * டாஸ்மாக் மதுபானக் கடையை 12 மணிக்கு திறப்பதற்கு பதில் மதியம் 2 மணிக்கு திறந்தால் என்ன?

    * 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யும் டாஸ்மாக ஊழியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

    * மதுவின் கேடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்யப்படுகிறதா? விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுக்கு எவ்வளவு செலவு செய்யப்படுகின்றன? இதற்கு அரசு எவ்வளவு நிதி ஒதுக்குகிறது? இந்த கேள்விகளுக்கு விரிவான பதிலை அளிக்கவேண்டும். விசாரணையை ஜூன் 11-ந்தேதிக்கு தள்ளிவைக்கின்றோம்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 
    Next Story
    ×