search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருவில் ஆணா, பெண்ணா என்று கண்டறிந்தால் 3 ஆண்டு ஜெயில் - சுகாதாரத்துறை எச்சரிக்கை
    X

    கருவில் ஆணா, பெண்ணா என்று கண்டறிந்தால் 3 ஆண்டு ஜெயில் - சுகாதாரத்துறை எச்சரிக்கை

    கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறிந்தால் 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. #pregnantwomen #genderpredictiontest
    சென்னை:

    தமிழகத்தில் திருவண்ணாமலை, வேலூர், கடலூர், கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறிந்து கருக்கலைப்பு செய்வது அதிகரித்து வருகிறது.

    இதனை தடுக்க ஊரக மருத்துவ சேவை இயக்கத்தின் சார்பில் அமைக்கப்பட்ட குழுவினர் ஸ்கேன் பரிசோதனை மையங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இந்த குழுவினர் சமீபத்தில் திருவண்ணாமலை, சேலம் ஆகிய இடங்களில் சோதனை நடத்திய போது கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறிந்து கூறிய 2 டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

    மேலும் தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூருக்கும் சென்று குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறிவதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் சித்தூரை சேர்ந்த 2 டாக்டர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட ஸ்கேன் பரிசோதனை மையங்கள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக ஊரக மருத்துவ சேவை இயக்க அதிகாரிகள் கூறியதாவது:-

    பெண் குழந்தைகளை கருவிலேயே அழித்து ஆண் குழந்தைகளை மட்டுமே பெற வேண்டும் என்று பலர் கருதுகின்றனர். தமிழகத்தில் தற்போது 1000 பெண் குழந்தைகள் என்ற விகிதத்துக்கு 964 பெண் குழந்தைகளே உள்ளன. இது மேலும் குறையும் அபாயம் உள்ளது.

    கருவில் ஆணா, பெண்ணா என்று கண்டறிந்து கருக்கலைப்பில் ஈடுபடுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கருக்கலைப்பு செய்வது சட்டப்படி சரியானதுதான். ஆனால் பாலினம் அறிந்து கருக்கலைப்பில் ஈடுபடுவது குற்றமாகும்.

    எனவே கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தும் நபர்களுக்கும், கருக்கலைப்புக்காக கர்ப்பிணியை அழைத்து செல்லும் கணவர் மற்றும் உறவினர்களுக்கும் 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும்.



    ஆணா, பெண்ணா என்று பரிசோதித்து தெரிவிக்கும் ஸ்கேன் பரிசோதனை மையங்களுக்கும், பாலினத்தை அறிந்து கருக்கலைப்பு செய்யும் மருத்துவர்களுக்கும் வாழ்நாள் தடை விதிக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.#pregnantwomen #genderpredictiontest
    Next Story
    ×