என் மலர்
செய்திகள்

கம்பம் - கேரளாவுக்கு அரசு பஸ்சில் கடத்த முயன்ற 500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
கூடலூர்:
தமிழகத்தில் ஏழை எளிய பொதுமக்களுக்காக அரசு சார்பில் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதனை சில வியாபாரிகள் ரேசன் ஊழியர்கள் மூலம் கடத்தி கேரள மாநிலம் சாத்தான்ஓடை, குமுளி, கட்டப்பனை ஆகிய பகுதிகளுக்கு கடத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக வருவாய்த்துறை மற்றும் உணவுப்பொருள் தடுப்பு போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை. இதனால் அரிசி கடத்தும் கும்பல் துணிச்சலாக ரேசன் அரிசிகளை கடத்தி வருகின்றனர்.
தமிழக-கேரள எல்லைப்பகுதியான கம்பம் மெட்டு, போடி மெட்டு, குமுளி ஆகிய பகுதிகளில் சோதனைச்சாவடி இருந்தபோதும் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க முடியவில்லை.
இந்தநிலையில் மதுரையில் இருந்து கேரளமாநிலம் எர்ணாகுளம் நோக்கி கேரள அரசு பஸ் வந்தது. கம்பம் பஸ்நிலையத்தில் ஒரு கும்பல் ரேசன்அரிசி மூட்டைகளை பஸ்சின் இருக்கையின் அருகில் ஏற்றியுள்ளனர். இதை பார்த்த சிலர் லோயர்கேம்ப் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் கேரள அரசு பஸ்சை மடக்கி பிடித்து சோதனையிட்டனர். அதில் 15 பைகளில் 500 கிலோ ரேசன்அரிசி கடத்தமுயன்றது தெரியவந்தது. இன்ஸ்பெக்டர் அல்போன்ஸ், ஏட்டு ஜெய்சிங் மற்றும் போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் கேரள அரசுபஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்றும் இல்லையென்றால் உங்கள் மீதும் வழக்குபதிவு செய்யப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.