என் மலர்
செய்திகள்

ஆண்டிப்பட்டி பகுதி வைகை ஆற்றில் மணல் கொள்ளை
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மணல் கொள்ளை அதிகரித்து வருகிறது. குறிப்பாக வைகை ஆற்றில் அதிக அளவு மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயம் மட்டுமின்றி குடிநீருக்கும் பொதுமக்கள் அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மணல் கடத்தல் கும்பலை பிடித்து அதிகாரிகள் அபராதம் விதித்த போதும் தொடர்ந்து மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது. வாகனங்களையும் எளிதில் மீட்டு வருவதால் அந்த கும்பல் துணிச்சலாக மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி தாசில்தார் செந்தில் தலைமையில் ஊழியர்கள் குன்னூர் ஆத்துக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வைகை ஆற்றில் ஒரு கும்பல் டிராக்டர் மூலம் மணல் கடத்திக் கொண்டு இருந்தது. அதிகாரிகளைப் பார்த்ததும் டிராக்டரை அங்கேயே விட்டு விட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது.
மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்த அதிகாரிகள் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும் அபராதமும் விதிக்கப்படும் என தெரிவித்தனர்.