search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 50-வது நாளாக நீடிக்கும் போராட்டம்
    X

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 50-வது நாளாக நீடிக்கும் போராட்டம்

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அ.குமரெட்டியாபுரம் கிராம மக்களின் தொடர் போராட்டம் இன்று 50-வது நாளை எட்டியது. இன்றைய போராட்டத்தில் வழக்கத்தை விட அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மதுரை பைபாஸ் சாலையில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இங்கு ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிர உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதோடு அப்பகுதி பொதுமக்களுக்கு பல்வேறு நோய்களும் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.

    இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் மேலும் 4 லட்சம் டன் தாமிர உற்பத்தி செய்யும் வகையில் ஆலையை விரிவாக்கம் செய்ய ஏற்பாடு நடந்தது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இதையடுத்து அ.குமரெட்டியாபுரம் பொதுமக்கள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். பொதுமக்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே போராட்டக்குழு சார்பாக தூத்துக்குடியில் பிரம்மாண்ட கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.

    வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அ.குமரெட்டியாபுரத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை அரசியல் கட்சியினர் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, ச.ம.க. தலைவர் சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோர் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

    நேற்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் நடந்து வரும் தொடர் போராட்டத்தில் கலந்து கொண்டார். அவர் மக்களோடு மக்களாக அமர்ந்து போராட்டத்தில் பங்கேற்றார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக கூறிய அவர் மக்களோடு இணைந்து தொடர்ந்து போராட்டத்தில் பங்கேற்பதாகவும் தெரிவித்தார்.

    மேலும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் மீது அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். மேலும் அவர் கூறும் போது, ‘ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் மத்திய-மாநில அரசுகள் பாராமுகமாக இருக்கின்றன. இந்த போராட்டத்திற்கு அரசு செவி சாய்க்க வேண்டும். அல்லது அரசை செவி சாய்க்க வைக்க வேண்டியது நமது கடமை. இந்த ஆலையை விரிவாக்கம் செய்யக்கூடாது. இதை மூடி விடுவது நல்லது.

    இந்தியாவுக்கு காப்பர் வர்த்தகம் தேவை என்றால் குடியிருப்பே இல்லாத இடத்தில் வைக்க வேண்டியதுதான். மக்கள் உயிரை விடவா காப்பர் வர்த்தகம் முக்கியம்’ என்றார். கமல்ஹாசன் வருகையை தொடர்ந்து ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் தூத்துக்குடியில் மேலும் தீவிரமடைந்துள்ளது.

    இந்த நிலையில் அ.குமரெட்டியாபுரம் கிராம மக்களின் தொடர் போராட்டம் இன்று 50-வது நாளை எட்டியது. இன்றும் ஏராளமான ஆண்களும், பெண்களும் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். கண்டன கோ‌ஷங்களும் எழுப்பினர்.


    போராட்டம் நடைபெறும் மரத்தின் அடியில் இன்று 50-வது நாள் என போர்டு எழுதி போட்டுள்ளனர். இன்றைய போராட்டத்தில் வழக்கத்தை விட அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதனிடையே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அருகில் உள்ள பண்டாரம்பட்டி கிராம மக்களும் நேற்று மாலை போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களது போராட்டம் இன்று 2-வது நாளாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் கல்லூரி மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். 4 நாள் விடுமுறைக்கு பின்னர் இன்று காலை கல்லூரிக்கு வந்த தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மாணவர்கள் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பியவாறு வகுப்புகளை புறக்கணித்து வெளியே வந்தனர். பின்பு கல்லூரியின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

    இதில் மாணவிகளும் கலந்து கொண்டு கோ‌ஷம் எழுப்பினார்கள்.

    ‘‘காப்பர் உங்களுக்கு கேன்சர் எங்களுக்கா’’ என கோ‌ஷங்கள் எழுப்பினர். இதுபற்றி இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘‘ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலையால் இப்பகுதியினருக்கு பல்வேறு நோய்கள் உருவாகின்றன. ஆலையை விரிவாக்கம் செய்தால் தூத்துக்குடி மக்கள் வாழ தகுதியற்ற நகராகிவிடும். பிறக்கும் குழந்தைகள் ஊனத்துடன் பிறக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த ஆலையை இங்கிருந்து விரட்டும்வரை எங்கள் போராட்டம் தொடரும்’’ என்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


    இதே போல மற்ற கல்லூரிகளிலும் மாணவர்கள் போராட்டம் நடத்த கூடும் என அறிந்து அந்த கல்லூரிகளில் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் இருந்து திரண்டு வந்த பெண்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பியவாறு மனு கொடுத்தனர்.

    மேலும் வழக்கறிஞர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் திரண்டு ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கண்டன கோ‌ஷம் எழுப்பி மனு கொடுத்தனர். இதனால் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

    இதுபற்றி அ.குமரெட்டியாபுரம் பகுதி பெண்கள் கூறும் போது, ‘ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை எங்கள் போராட்டம் நடைபெறும். மக்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ஸ்டெர்லைட் போன்ற ஆலைகளை மூட வேண்டும்.

    மேலும் எங்கள் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக அருகில் உள்ள மற்ற கிராமத்தினரும் போராட்டம் நடத்த உள்ளனர். இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்’ என்றனர்.  #Tamilnews
    Next Story
    ×