என் மலர்
செய்திகள்

நெய்வேலி, கூடங்குளம் மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு வழங்கக்கூடாது - பேராசிரியர் ஜெயராமன்
மயிலாடுதுறை:
மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் மயிலாடுதுறையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி நீர் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறியது. இந்த காலக்கெடு முடிவடைந்து விட்டது. 17 நாட்களாக தமிழக எம்.பி.க்.கள் பாராளுமன்றத்தை முடக்கியுள்ளனர்.
இது வரை மேலாண்மை வாரியத்தை பற்றி வாய்திறக்காத மத்திய அரசு தற்போது தீர்ப்பில் என்ன கூறப்பட்டுள்ளது என்று எதுவும் தெரியாதது போல் கேட்கிறது.
இந்த விவகாரத்தில் காவிரி நீர் தமிழகத்திற்கு கிடைக்காமல் இருக்க சட்டத்தில் என்ன ஓட்டை உள்ளது என்று மத்திய அரசு தேடுகிறது. நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு ஆதரவு திரட்டிய ஜக்கி வாசுதேவ், விவசாயிகள் தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டும் என்று நியூயார்க்கில் பேசியது கண்டிக்கத்தக்கது. நதிகள் இணைப்பு என்பது ஆறுகளை பறித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொடுக்கும் திட்டமாகும்.
பன்னாட்டு நிறுவனங்கள் ஆறுகளில் குழாய்கள் அமைத்து ஆற்று நீரை விற்கும் நிலை ஏற்படும். அதை காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்படுவார்கள்.
தமிழகத்தில் காவிரி பிர்ச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்று நெய்வேலி, கூடங்குளம் மின்சாரத்தை தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு வழங்கக் கூடாது. எண்ணெய் கிணறுகள் அமைப்பதை தடுத்து நிறுத்த மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்.
தமிழக மக்கள் நலனை பற்றி மத்திய அரசு ஒரு போதும் கவலைப்படாது. தமிழகத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் ஒன்றிணைந்து தமிழகத்தின் இயற்கை வளங்கள் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews






