search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி விவகாரம் - நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு
    X

    காவிரி விவகாரம் - நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு

    காவிரி மேலாண்மை வாரியம் விஷயத்தில் உச்ச நீதிமன்றம் விதித்த கெடுவிற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் மத்திய அரசுக்கு எதிராக கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
    புதுடெல்லி:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த 6 வார காலகெடு நாளை (வியாழக்கிழமை) முடிகிறது. எனவே நாளைக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்குமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற உள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    ஆனால், தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளை உச்ச நீதிமன்றம் தீர்க்க வேண்டும் என சட்ட அமைச்சகம் பரிந்துரை செய்திருப்பதால் புதிய சிக்கல் உருவாகி உள்ளது. இந்த பரிந்துரையை ஏற்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    எனவே, தமிழக அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு தயாராகி வருகிறது. தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன், முதல்-அமைச்சரின் செயலாளர் சாய்குமார் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

    நேற்று அவர்கள் மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள், சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தினார்கள். அந்த கூட்டத்தில் தமிழக அரசின் டெல்லி அதிகாரிகளும் கலந்து கொண்டனர். காவிரி விவகாரத்தில் அடுத்து செய்ய வேண்டியவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், உச்ச நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நாளை (29-ந் தேதி) வரை கெடு அவகாசம் இருப்பதால் அதுவரை காத்திருக்க முடிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக தமிழக அதிகாரிகள் குழு இன்றும் ஆலோசனையில் ஈடுபட்டது.

    கர்நாடகா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அம்மாநில மக்களின் அதிருப்தியை சம்பாதித்து விடக்கூடாது என்ற பயத்தில் இருக்கும் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் காவிரி மேலாண்மை வாரியத்துக்கு பதில் வேறு ஒரு அமைப்பை உருவாக்குவார்கள் என்று கூறப்படுகிறது. அந்த புதிய அமைப்புக்கு இன்று மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கும் என்று டெல்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    அந்த புதிய அமைப்புக்கு “காவிரி மேற்பார்வை வாரியம்” என்று பெயரிடப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    தமிழக அரசு எந்த ஒரு புதிய அமைப்பையும் ஏற்காது என்று ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்துள்ளது. எனவே புதிய அமைப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவது குறித்து ஆலோசித்து வருகிறார்கள். நீதிமன்ற அவமதிப்பு வழக்காக அது இருக்கும்.

    இன்று மாலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. #tamilnews
    Next Story
    ×