என் மலர்
செய்திகள்

வாகனம் மோதி வாலிபர் பலி: பொதுமக்கள் சாலை மறியல்
கடலூர்:
கடலூரை அடுத்த சித்திரைபேட்டை பகுதியை சேர்ந்தவர் பெரியாண்டவர். இவரது மகன் சரண்குமார் (வயது 23). இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சரண்குமார் தனது சொந்த ஊரான சித்திரைப் பேட்டைக்கு வந்திருந்தார்.
நேற்று முன்தினம் இரவு கடலூர் முதுநகர் சாலையில் சரண்குமார் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சரண்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட சரண்குமார் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சரண்குமாரின் உறவினர்கள் முதுநகர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் இதுவரை அந்த வாகனத்தை கண்டுபிடிக்கவில்லை. இதைக்கண்டித்து இன்று சரண்குமாரின் உறவினர்கள் மற்றும் சித்திரைபேட்டையை சேர்ந்த பொதுமக்கள் கடலூர் பச்சையாங்குப்பம் பகுதியில் திரண்டனர். பின்னர் அவர்கள் கடலூர்-சிதம்பரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் சரண்குமாரின் இறப்பிற்கு காரணமான வாகனத்தை கண்டுபிடித்து, டிரைவரை உடனடியாக கைது செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு போலீசார் விசாரணை நடந்து வருகிறது. விரைவில் அந்த வாகனத்தின் டிரைவர் கைது செய்யப்படுவார். நீங்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து செல்லுங்கள் என கூறினர். அதற்கு மறுப்பு தெரிவித்து தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றபோது அந்த பகுதி இளைஞர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைந்துபோக செய்தனர். இந்த திடீர் சாலைமறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #tamilnews






