என் மலர்
செய்திகள்

பஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி நாளை ஆர்ப்பாட்டம்: விஜயகாந்த் அறிக்கை
சென்னை:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசு சார்பில் பேருந்து கட்டணம் 20-ந்தேதியில் இருந்து 55 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. இன்று (28-ந்தேதி) 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை குறைத்து, தமிழக அரசு பேருந்து கட்டணத்தை குறைத்து விட்டது போல் நாடகம் ஆடுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.
எடுத்துக்காட்டாக ஒரு கிலோ மீட்டருக்கு 42 பைசாவாக இருந்த பேருந்து கட்டணத்தை 60 பைசாவாக உயர்த்திவிட்டு, 2 பைசா குறைத்து, கிலோ மீட்டருக்கு 58 பைசாவாக நிர்ணயிப்பது மக்களை ஏமாற்றும் செயல்.
2011-ல் அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்த பொழுது இரு மடங்காக பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்பொழுது தே.மு.தி.க. சட்டசபையில் எதிர்ப்பை தெரிவித்தது.
அதன்பிறகு தற்பொழுதும் பேருந்துகட்டணம் அ.தி. மு.க. ஆட்சியில் 60 சதவீதம் உயர்த்தியிருப்பது வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.
ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தாமல், மக்களுக்கு இலவசத்தை கொடுத்து, அதில் ஊழல் செய்வதில் அக்கறை செலுத்துகிறதே தவிர, வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தாமல், இளைஞர்கள் வேலையில்லாமல் தவித்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்தி, குறைப்பது போல் நாடக மாடுவதை தவிர்த்துவிட்டு, உயர்த்தப்பட்ட கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்து விட்டு, போக்குவரத்து துறையில் நடைபெறும் ஊழல்களையும், நிர்வாகச் சீர்கேட்டையும் சரிசெய்தாலே நஷ்டத்தை ஈடுசெய்ய முடியும்.
ஆண்ட கட்சியும், ஆளுகின்ற கட்சியும் ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டுவதை நிறுத்திவிட்டு, முதல்-அமைச்சராக இருக்கும் வரையாவது, மக்களை பாதிக்காத வண்ணம் நல்ல திட்டங்களையும், ஆக்கப் பூர்வமான பணிகளையும் செய்யவேண்டும்.
மேலும் பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி 29-ந்தேதி அன்று தே.மு.தி.க. சார்பில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்.
இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார். #Vijayakanth #BusFareHike #tamilnews