என் மலர்
செய்திகள்

மின்சாரம் பாய்ந்து பலியான அய்யப்ப பக்தர் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு
ஊட்டி:
ஊட்டி அருகே உள்ள கோடப்பமந்து பகுதியை சேர்ந்தவர் பாபு (42). தொழிலாளி. சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்து இருந்தார். இவர் அங்குள்ள விநாயகர் கோவில் அருகே சாலையோரம் கொட்டப்பட்ட இயற்கை உரமான சாணத்தை ஒரு பெரிய கூடையில் நிரப்பி அருகில் உள்ள தோட்டத்துக்கு கொண்டு சென்றார்.
அவர் சாலையில் இருந்து அங்குள்ள சிறிய பள்ளம் வழியாக தோட்டத்துக்கு செல்லும் சாலையை விட்டு இறங்கினார். அப்போது கீழே விழுந்து விடாமல் இருக்க சாலையோரம் நடப்பட்ட கம்பியை பிடித்தார்.
அந்த கம்பியில் நாளை (சனிக்கிழமை) எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி அ.தி.மு.க. கொடி கட்டி வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இரும்பு கம்பியை பிடித்து பாபு இறங்கும் போது எதிர்பாராத விதமாக அந்த கம்பி சாய்ந்து மேலே சென்ற மின்கம்பத்தை தொட்டதில் அந்த கம்பி வழியாக மின்சாரம் பாய்ந்தது.
இதில் பாபு மின்சாரம் தாக்கி அதே இடத்தில் இறந்தார். இதை பார்த்த அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர்.
ஆவேசம் அடைந்த அவர்கள் ஊட்டி-கோத்தகிரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மின் வாரிய துறை அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து சம்பவம் நடைபெற்ற இடம் அருகே உள்ள மின் மாற்றியில் இருந்து செல்லும் மின்சாரத்தை துண்டித்தனர்.
மறியல் குறித்த தகவல் அறிந்த ஊட்டி டி.எஸ்.பி. மணிகண்டன் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மின்சாரம் தாக்கி பலியான பாபு குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோஷமிட்டனர்.
அவர்களை சமாதானப்படுத்திய போலீசார் பாபு உடலை மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனைக்கு பின் பாபுவின் உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்து உள்ளனர். இதனால் ஊட்டியில் பரபரப்பு நிலவி வருகிறது.
மின்சாரம் தாக்கி பலியான பாபுவிற்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.