search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் பார் உரிமை டெண்டரில் ஒருவர் கூட பங்கேற்கவில்லை
    X

    டாஸ்மாக் பார் உரிமை டெண்டரில் ஒருவர் கூட பங்கேற்கவில்லை

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் பார்களுக்கு காக்களூரில் உள்ள மண்டல மேலாளர் அலுவலகத்தில் இன்று டெண்டர் விடப்பட்டது. ஆனால் டெண்டரில் யாரும் பங்கேற்கவில்லை.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் 106 டாஸ்மாக் கடைகளில் 16 கடைகளுக்கும், கிழக்கு மாவட்டத்தில் 166 கடைகளுக்கும் பார் வசதி உள்ளது.

    கடந்த மாதம் 30-ந் தேதியுடன் கடந்த ஆண்டுக்கான பார் டெண்டர் முடிந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான ஏலம் அறிவிக்கப்பட்டது.

    அப்போது டாஸ்மாக் கடையில் மாதாந்திர மொத்த விற்பனையில் 3 சதவிகிதம் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என்று அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் விடப்பட்ட பார் டெண்டரை யாரும் ஏலம் எடுக்க வரவில்லை.

    இதையடுத்து பார் உரிமையாளர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று உரிமைத்தொகையை 3 சதவிகிதத்திலிருந்து 2.4 சதவிகிதமாக குறைத்து அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் பார்களுக்கு காக்களூரில் உள்ள மண்டல மேலாளர் அலுவலகத்தில் இன்று டெண்டர் விடப்பட்டது.

    கிழக்கு மாவட்டத்தில் 90 விண்ணப்பங்களும், மேற்கு மாவட்டத்தில் 17 விண்ணப்பங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், மதியம் 2 மணி வரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்கலாம் என்றும் டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆனால் டெண்டர் நடைபெறும் இடத்தில் பார் உரிமையாளர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இதனால் அலுவலகம் வெறிச்சோடி கிடந்தது. ஏலம் நடைபெறும் டாஸ்மாக் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மாலை 5 மணியளவில் டாஸ்மாக் பார் ஏலம் எடுத்தவர்களின் விவரம் தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கான பார் ஏலம் திருமழிசையில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடந்தது. அங்கும் யாரும் பங்கேற்கவில்லை.

    பார் உரிமத்தொகையை குறைக்காவிட்டால் இன்று நடைபெறும் டெண்டரில் தமிழகம் முழுவதும் உள்ள பார் உரிமையாளர்கள் பங்கேற்க மாட்டோம் என்று டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கத்தினர் ஏற்கனவே அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×