என் மலர்
செய்திகள்

கோச்சடையில் கோவிலுக்கு சென்று திரும்பிய பெண்ணிடம் நகை பறிப்பு
மதுரை:
மதுரை கோச்சடை அம்மாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்து ராமலிங்கம், டிராவல்ஸ் ஊழியர். இவரது மனைவி ஆண்டாள் (வயது38).
இவர் அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு இரவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். சொக்கலிங்க நகர் மீனாட்சி அம்மன் கோவில் அருகே ஆண்டாள் வந்தபோது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர்.
அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆண்டாளின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றனர். இருப்பினும் சுதாரித்துக்கொண்ட ஆண்டாள், நகையை பிடித்துக்கொண்டு போராடினார். இதில் அவரது கையில் 3 பவுனும், கொள்ளையர் கையில் 2 பவுனும் சிக்கியது.
கையில் கிடைத்த நகையுடன் மோட்டார் சைக்கிள் ஆசாமிகள் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். ஆண்டாள் திருடன்...திருடன்... என கூக்குரல் எழுப்பியதில் அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். ஆனால் அதற்குள் கொள்ளையர்கள் மாயமாக மறைந்து விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
கூடல்புதூர் கலைநகர் வள்ளுவர் காலனியை சேர்ந்த பூமிநாதன் (32), அழகம்மாள் (60), யுவ ராஜா, எஸ்.ஆலங்குளம் ஜெயக் கொடி (60), பூங்கா நகர் முதல் தெரு மகாலட்சுமி (35) ஆகியோரது வீடுகளில் நேற்று இரவில் மாடுகள் திருட்டு போயின. திருட்டு போன 5 மாடுகளின் மதிப்பு ரூ.5 லட்சம் என கூடல் புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாடு திருடிய மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர்.






