search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை மதகை சீரமைப்பதில் திடீர் சிக்கல்: தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
    X

    கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை மதகை சீரமைப்பதில் திடீர் சிக்கல்: தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

    தண்ணீர் தொடர்ந்து அணைக்கு வந்த வண்ணம் இருப்பதால் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை மதகை சரி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே, ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணையும், கிருஷ்ணகிரி அருகே கே.ஆர்.பி. அணையும் கட்டப்பட்டுள்ளது. கே.ஆர்.பி. அணை 52 அடி கொள்ளளவு கொண்டதாகும்.

    கடந்த 3 மாதங்களாக கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாகவும், கிருஷ்ணகிரி மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் பெய்த மழை காரணமாகவும் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. எனவே 52 அடி கொள்ளளவு உள்ள கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை நீர்மட்டம் முழு கொள்ளளவையும் எட்டியது. இதனால் அணையின் பாதுகாப்பை கருதி 51 அடி அளவுக்கு நீர் தேக்கி வைக்கப்பட்டு மீதம் வருகிற தண்ணீர் முழுவதும் தொடர்ந்து திறந்து விடப்பட்டு வருகிறது.

    கடந்த 100 நாட்களுக்கும் மேலாக கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் 51 அடியாக இருந்தது. 51 அடியாக இருந்த நிலையில், நேற்று அணைக்கு வினாடிக்கு 316 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் யாரும் எதிர்பாராத வகையில், கிருஷ்ணகிரி அணையின் பிரதான மதகின் முதல் ‌ஷட்டர் உடைந்து தண்ணீர் பெருக்கெடுத்து சென்றது. இதை அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    தகவல் அறிந்து பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சாம்ராஜ் மற்றும் பொறியாளர்கள் அங்கு விரைந்து வந்தனர். அதே போல கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். அந்த நேரம் அணையின் பிரதான மதகின் முதல் ‌ஷட்டரில் இருந்து தண்ணீர் அதிக அளவில் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

    இதையடுத்து உடனடியாக அருகில் 5-வது மதகில் 2,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. 6 ஆயிரம் கன அடிக்கும் மேல் கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீர் வெளியேறி வருவதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து செல்கிறது.

    ஏற்கனவே கிருஷ்ணகிரி அணையில் இருந்து, அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்படுவதால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

    நேற்றுடன் 102 நாட்களாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 6 ஆயிரம் கன அடிக்கும் மேலாக தண்ணீர் சீறி பாய்ந்து செல்வதால், தென்பெண்ணை ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தண்டோரா மூலமாகவும் வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டு வருகிறது.

    ‌ஷட்டர் உடைந்தது ஏன்? என பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சாம்ராஜ் தெரிவிக்கையில், கடந்த 100 நாட்களுக்கு மேல் அணையில் 51 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளதால் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மரங்கள் மோதி, ‌ஷட்டர் சேதமாகியிருக்கலாம். மீதமுள்ள 7 ‌ஷட்டர்களும் நல்ல முறையில் இருக்கும் போது முதல் ‌ஷட்டர் மட்டும் சேதமாகியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. ‌ஷட்டர் எவ்வாறு சேதமானது என்பது குறித்து ஆய்வுக்கு பின் தெரியவரும் என்றார்.

    கிருஷ்ணகிரி அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேறி வருவதால், பொதுப்பணித் துறையினர், வருவாய்த்துறையினர், காவல் துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் பேரிடர் மேலாண்மை குழுவினரும் அணைக்கு வந்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி எம்.பி. அசோக்குமார் அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், கரையோர பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் பேரிடர் மேலாண்மை முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.

    சென்னை தலைமை பொதுப்பணித் துறையில் இருந்து தலைமை பொறியாளர் முருக சுப்பிரமணியன் தலைமையில் 4 பேர் கொண்ட வல்லுனர் குழுவினர் இன்று காலையில் அணையில் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட கலெக்டர் கதிரவன் இன்று காலை அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



    ஆய்வுக்கு பின் தலைமை பொறியாளர் முருக சுப்பிரமணியன் கூறியதாவது:-

    தண்ணீர் தொடர்ந்து அணைக்கு வந்த வண்ணம் இருப்பதாலும், உடைந்த ‌ஷட்டரை சரி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அணையில் 51 அடி நீர் இருப்பு உள்ளது.

    அணையில் இருந்து 20 அடி நீர் வெளியேற்றினால் தான் உடைந்த பிரதான முதல் மதகை சரி செய்ய முடியும். 6 பிரதான மதகுகள் வழியாக சுமார் 10 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 20 அடி நீர் வெளியேற்ற சுமார் 72 மணி நேரம் கால தாமதம் ஆகும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    வல்லுனர் குழுவினருடன் மாவட்ட கலெக்டர் கதிரவன், குழுவினருடன் வருவாய் கோட்டாட்சியர் அருள், செயற்பொறியாளர் சாம்ராஜ் மற்றும் தாசில்தார் கன்னியப்பன், மற்றும் அரசு அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள்கள் உடனிருந்தனர்.

    கே.ஆர்.பி. அணை பகுதியில் 2 மெயின் கேட்டுகள் உள்ளன. ஒரு மெயின் கேட் அணையில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மற்றொரு மெயின் கேட்டு அணையின் பக்கத்தில் உள்ளது. இந்த 2 மெயின் கேட்டுகளிலும் கிருஷ்ணகிரி டி.எஸ்.பி.கண்ணன் தலைமையில் சுமார் 30-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு அணை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் பேரிடர் மீட்டு பாதுகாப்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் அணைக்கு முன்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    பொதுமக்கள் அணையை பார்வையிட அனுமதிக்கப்படவில்லை. இதனால் அணையை பார்க்க வந்த மக்கள் திரும்பி சென்றனர்.

    காவேரிப்பட்டணம் வழியாக தென் பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் காவேரிப்பட்டணம் மேம்பாலத்திற்கு மேல்நின்று மாணவ, மாணவிகள், பொதுமக்கள் சாரை சாரையாக பார்த்து விட்டு செல்கிறார்.
    Next Story
    ×