search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
    X

    தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

    ஊதிய உயர்வு வழங்க கோரி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    தர்மபுரி:

    தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி, அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து ஒரே வளாகத்தில் செயல்படுகிறது. இந்த ஆஸ்பத்திரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுகிறார்கள். 4 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் புறநோயாளிகளாக சிகிச்சைக்கு வந்து செல்கிறார்கள். இங்கு கண்காணிப்பு பணி மற்றும் துப்புரவு பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் மூலம் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டு பணி புரிந்து வருகிறார்கள்.

    இந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் துப்புரவு பணி மற்றும் கண்காணிப்பு பணி ஆகியவை பாதிக்கப்பட்டன. பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சம்பந்தப்பட்ட நிறுவன நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    இதுதொடர்பாக பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கூறியதாவது:-

    தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 5 ஆண்டுகளாக 235பேர் பணிபுரிந்து வருகிறோம். இவ்வாறு பணிபுரிபவர்களில் 150 பேர் பெண்கள். எங்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.5,500-ம் அதிகபட்ச ஊதியமாக ரூ.6,500-ம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆண்டுக்கொருமுறை வழங்கப்படும் ஊதிய உயர்வு கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. பி.எப். உள்ளிட்ட தொழிலாளர் நலத்திட்டங்களும் எங்களுக்கு செயல்படுத்தப்படவில்லை.

    விலைவாசி உயர்வால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ள எங்களுக்கு முறையாக ஊதிய உயர்வு வழங்க வேண்டும். வார விடுமுறை, மருத்துவ விடுமுறை உள்ளிட்ட விடுமுறைகளை வழங்கவும், தொழிலாளர் நலத்திட்டங்களை செயல் படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இந்த போராட்டம் காரணமாக அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×