என் மலர்
செய்திகள்

மானாமதுரையில் அரசு பஸ்-லாரி மோதல்: தொழிலாளி உடல் நசுங்கி பலி
மானாமதுரை:
ராமேசுவரத்தில் இருந்து நேற்று இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் புறப்பட்டது. இரவு 10 மணிக்கு மானாமதுரை அருகே உள்ள சங்கமங்கலம் விலக்கில் வந்தபோது காரைக்குடியில் இருந்து கமுதி நோக்கி வேகமாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக அரசு பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் லாரி மற்றும் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது.
பஸ்சில் பயணம் செய்த மானாமதுரை பாகபத் தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளி செந்தில்வடி வேல் (வயது40) என்பவரின் கை துண்டாகி ரத்த வெள்ளத்தில் பலியானார்.
பஸ்சில் இருந்த மதுரை சிந்தாமணியை சேர்ந்த வள்ளி (50), பாரூக், பரமக்குடியை சேர்ந்த கண்ணன் (37), ஆலங்குளம் செந்தில்ராஜா (34), வல்லம் ரிஷிகுமார் (18), ராம நாதபுரம் சரத்குமார் (19) உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதில் வள்ளி ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றவர்கள் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து மானாமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது பரகத்துல்லா வழக்குப்பதிவு செய்து கமுதியை சேர்ந்த லாரி டிரைவர் செந்தில்குமாரை கைது செய்தார்.






