search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர் - விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாட்களாக கொட்டி தீர்த்த கனமழை
    X

    கடலூர் - விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாட்களாக கொட்டி தீர்த்த கனமழை

    வடகிழக்கு பருவ மழை தொடங்கியதை அடுத்து கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு நாட்களாக பலத்த மழை கொட்டியது.
    கடலூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 27-ந் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

    கடலூர் நகரில் நேற்று காலை 6 மணி முதல் 7 மணி வரை பலத்த மழை கொட்டியது. தொடர்ந்து மாலை வரை சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

    இந்த நிலையில் இரவு 7 மணியளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் கடலூரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இந்த மழை விடிய விடிய பெய்தது.

    இதேபோல் கடலூர், பண்ருட்டி, கண்டரக்கோட்டை, அண்ணாகிராமம், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம், குறிஞ்சிப்பாடி போன்ற பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

    சிதம்பரத்தில் 33 மி.மீ. மழையும், கடலூரில் 28.30 மி.மீ. மழையும் பெய்தது. மாவட்டத்தை பொறுத்தவரை பல்வேறு இடங்களில் இன்றும் மழை பெய்து கொண்டே இருக்கிறது.

    கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி ஆகிய 7 தாலுகாக்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா, கடலூர் துறைமுகம், கிள்ளை, ராசாப்பேட்டை உள்பட 50 மீனவ கிராமங்கள் உள்ளன.

    கடந்த 2 நாட்களாக கடலில் கடல் சீற்றமும், சூறை காற்றும் வீசுவதால் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் துறைமுக பகுதியிலும், கடற்கரை ஓரத்திலும் விசைப்படகுகளும், பைபர் படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    கடந்த 2015-ம் ஆண்டு பெய்த கனமழையால் கடலூர் மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல கிராமங்கள் வெள்ளத்தில் சூழ்ந்தது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

    தற்போது கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மீட்பு பணிக்கு தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    மேலும் தீயணைப்பு வீரர்களுக்கு ரப்பர் படகு, உயிர் காக்கும் உடைகள், உயிர் காக்கும் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் பொதுப்பணித் துறை சார்பில் ஏராளமான மணல் மூட்டைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளது.

    விழுப்புரம் மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. விழுப்புரம் பஸ் நிலையம், சுதாகர் நகர், அண்ணா நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    நேற்று மாலை கண்டமங்கலம், வழுதாவூர், கொடுக்கூர், வானூர், செஞ்சி போன்ற பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

    கண்டமங்கலம் வாய்க்கால்மேடு பகுதியில் சிவகாமி (வயது 60) என்பவரது கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் அவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    விழுப்புரம் மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    மரக்காணம், அனுமந்தை, கீழ்குத்துப்பட்டு போன்ற பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய பலத்த மழை பெய்தது. இந்த மழையால் சுமார் 60-க்கும் மேற்பட்ட ஏரி-குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    மரக்காணத்தில் பலத்த மழை பெய்து வருவதால் அங்கு உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. உப்பளங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் இன்று 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை.

    விழுப்புரம் மாவட்டத்தில் எக்கியார்குப்பம், அனுமந்தைகுப்பம், புதுகுப்பம் உள்பட 19 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ள கடலில் பயங்கர சூறாவளி காற்றும், கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் படகுகள் கடற்கரையோரம் நிறுத்தப்பட்டுள்ளன.

    காரைக்காலில் நேற்று விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருந்தது. இன்று காலை மழை தூறி கொண்டு இருந்தது. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
    Next Story
    ×