என் மலர்
செய்திகள்

விழுப்புரம் அருகே தனியார் நிறுவன ஊழியர் வெட்டிகொலை: போலீசார் விசாரணை
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள ராவுத்தன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 47). இவர் புதுவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முருகன் உள்ளிட்ட சில தொழிலாளர்களை தொழிற்சாலை நிர்வாகம் பணியில் இருந்து நீக்கியது. இதில் முருகனுக்கு தொழிற்சாலை நிர்வாகம் ரூ.5 லட்சம் வழங்கியது. இந்த பணத்தை வாங்கி கொண்டு முருகன் மது குடித்து ஜாலியாக செலவழித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் ஆரோவில் அருகே திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு ஜவகர் நகரில் உள்ள சுடுகாட்டில் தலையில் வெட்டுகாயங்களுடன் முருகன் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் ஆரோவில் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதீப்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை பார்வையிட்டனர். அதில் முருகனின் தலையில் வெட்டுகாயம் இருந்தது.
இதையடுத்து, அவரை யாரோ மர்ம மனிதர்கள் வெட்டி கொலை செய்துள்ளனர் என்பதை போலீசார் உறுதி செய்தனர். எதற்காக முருகனை கொலை செய்தனர்? கொலை செய்தது யார்? என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முருகனுக்கு சுகுணா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மூத்த மகள் நர்சிங் பட்டய படிப்பும், இளைய மகள் பிளஸ்-1 வகுப்பும் படித்து வருகின்றனர்.






