என் மலர்
செய்திகள்

காதல் தோல்வி: புதுவை லாட்ஜில் என்ஜினீயர் தற்கொலை
புதுச்சேரி:
புதுவையை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயத 33). என்ஜினீயரான இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோருடன் மும்பையில் தங்கி அங்குள்ள ஐ.டி. கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.
இவர் மும்பையில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினார்.
இதற்கு சதீஷ்குமாரின் பெற்றோர் சம்மதம் தெரிவித்தாலும் காதலியின் பெற்றோர் சம்மதிக்க வில்லை.
இதனால் சதீஷ்குமார் சோகத்துடன் இருந்து வந்தார். அவருக்கு அவரது தாய் சமாதானம் செய்து வந்தாலும் சதீஷ்குமார் காதலியை நினைத்தபடியே வருத்தத்துடன் இருந்து வந்தார்.
இந்த நிலையில் புதுவை சென்று வருவதாக தனது தாயாரிடம் சதீஷ்குமார் கூறி விட்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதுவை வந்தார்.
புதுவை ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள தனியார் விடுதி அறையில் தங்கி இருந்த சதீஷ்குமார் காதல் தோல்வி விரக்தியில் சம்பவத்தன்று மின் விசிறியில் போர்வையால் தூக்குபோட்டு தொங்கினார்.
அப்போது சத்தம் கேட்டு விடுதி ஊழியர்கள் விரைந்து வந்து தூக்கில் இருந்து சதீஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று மாலை சதீஷ்குமார் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






