என் மலர்tooltip icon

    செய்திகள்

    தினகரன் அணியிலிருந்து தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. விலகத் திட்டமா?: 24-ந்தேதி அறிவிக்கிறார்
    X

    தினகரன் அணியிலிருந்து தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. விலகத் திட்டமா?: 24-ந்தேதி அறிவிக்கிறார்

    டி.டி.வி.தினகரன் அணியிலிருந்து விலக திட்டமிட்டு இருப்பதாக தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
    ஈரோடு:

    அ.தி.மு.க.வின் இரு அணிகளும் நேற்று மாலை ஒன்றாக இணைந்தது. அணிகள் இணைப்பு நடந்த உடனடியாக ஓ.பன்னீர் செல்வம் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டார். பாண்டியராஜன் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

    இவர்களுக்கு கவர்னர் வித்யாசாகர்ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    இந்த நிலையில் சென்னையில் டி.டி.வி.தினகரன் நேற்று தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். வழக்கம்போல முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற விழாவை புறக்கணிப்பதுபோல நேற்று தினகரன் நடத்திய எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டத்தையும் நேற்று அவரது ஆதரவாளரான பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலம் புறக்கணித்து விட்டார். கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.

    இதனால் அவர் டி.டி.வி.தினகரன் அணியிலிருந்து விலக திட்டமிட்டு இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.


    எனக்கு எந்தவித பதவியும் தேவையில்லை. எனது தொகுதியான பெருந்துறை தொகுதி வளர்ச்சிக்கு அறிவிக்கப்பட்ட அறிவிக்கப்படாத திட்டங்களை நிறைவேற்றினால் போதும் என்று தோப்பு வெங்கடாச்சலம் கூறி இருந்தார். மேலும் மதுரை மேலூரில் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. தனது ஆதரவாளர்களை திரட்டி சென்று இருந்தார்.

    இந்த நிலையில் ஓ.பி.எஸ்-எடப்பாடி பழனிசாமி அணிகளின் இணைப்புக்கு பிறகு தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. திடீர் மனமாற்றம் அடைந்திருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

    தனது நிலைபாட்டை அவர் 24-ந்தேதி (வியாழக்கிழமை) அறிவிக்கப் போவதாகவும் கூறி இருந்தாராம். இதனால் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. தினகரன் அணியிலிருந்து விலகி ஒன்றாக இணைந்த அ.தி.மு.க. பக்கம் சாய்வார் என்று கூறப்படுகிறது.

    இதுபற்றி தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ.வை தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.

    அவரது உதவியாளர்களிடம் விசாரித்தபோது, ‘‘தினகரன் நடத்திய கூட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று தெரியாது. ஏதாவது முக்கிய தேவையாக எங்கேயாவது சென்றிருப்பார். இப்போது அவர் சென்னையில் இருக்கிறாரா? எங்கே இருக்கிறார்? தெரியவில்லை’’ என்று கூறினர்.

    தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. ஓரிரு நாட்களில் ஒன்றிணைந்த அ.தி.மு.க. அணியில் இணையக்கூடும் என அவரது நெருங்கிய ஆதுரவாளர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×