என் மலர்tooltip icon

    செய்திகள்

    கதிராமங்கலத்தில் அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தவர்கள் மட்டுமே கைது: முதல்வர் பழனிச்சாமி
    X

    கதிராமங்கலத்தில் அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தவர்கள் மட்டுமே கைது: முதல்வர் பழனிச்சாமி

    கதிராமங்கலத்தில் அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் திமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் குழாயில் இருந்து கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டதால், அச்சமடைந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.

    போலீசார் தடியடி நடத்தியால் அந்த கிராமமே கலவர பூமியாக காட்சி அளித்து. போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை போலீசார் கைது செய்தனர்.

    இருப்பினும், மக்கள் தங்களது போராட்டத்தினை கைவிடவில்லை. கதிராமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிர்ப்பு மூன்றாவது நாளாக இன்றும் கடையடைத்து போராட்டம் நடைபெற்றது. 

    இதனிடையே, கதிராமங்கலத்தில் ஒன்ஜிசிக்கு எதிராக போராடியதாக கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுவிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், கதிராமங்கலம் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக, காங்கிரஸ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. திமுக கொண்டு வந்த தீர்மானத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்தார். 

    அப்போது, கதிராமங்கலத்தில் அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று தெரிவித்தார்.

    மேலும், “வைக்கோலை சாலையில் போட்டு தீ வைத்து அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தனர். மக்களில் சிலர் கற்களை வீசி வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போலீசார் சிலருக்கு காயம் ஏற்பட்டது” என்று விளக்கம் அளித்தார்.


    Next Story
    ×