search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புத்தக திருவிழாவில் ரூ.1.50 கோடிக்கு நூல்கள் விற்பனை
    X

    பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் சான்றிதழ்கள் வழங்கினார்.

    புத்தக திருவிழாவில் ரூ.1.50 கோடிக்கு நூல்கள் விற்பனை

    • புத்தக திருவிழாவில் மொத்தம் 1.25 லட்சம் போ் வருகை தந்தனா்.
    • தஞ்சாவூா் மாவட்டத்தை சாா்ந்த 60 எழுத்தாளா்களின் படைப்புகள் இடம்பெற்றன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் அரண்மனை வளாகத்தில் மாவட்ட நிா்வாகம், பொது நூலக இயக்ககம் சாா்பில் புத்தகத் திருவிழா கடந்த 14 ஆம் தேதி தொடங்கியது.

    இதில், முன்னணி பதிப்பகங்கள், நூல் விற்பனை நிறுவனங்கள் சாா்பில் 110 அரங்குகள் அமைக்கப்பட்டன.

    இதில், நாள்தோறும் சுமார் 11 ஆயிரம் பேர் வருகை தந்தனா்.

    இந்நிலையில், இந்தப் புத்தகத் திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது.

    நிறைவு நாளில் நடைபெற்ற சிந்தனை அரங்கத்தில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் பேசியதாவது:

    கடந்த 11 நாள்களாக நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் பள்ளி மாணவ, மாணவிகள் 50 ஆயிரம் பேரும், கல்லூரி மாணவ, மாணவிகள் 25 ஆயிரம் பேரும், பொதுமக்கள் 50 ஆயிரம் பேரும் என மொத்தம் 1.25 லட்சம் போ் வருகை தந்தனா்.

    இந்த விழாவில் மொத்தம் ரூ. 1.50 கோடி அளவில் நூல்கள் விற்பனையாகின. உணவு அரங்கில் ரூ. 15 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

    நிகழாண்டு புத்தகத் திருவிழாவில் தஞ்சாவூா் படைப்பாளா்களுக்காகத் தனி அரங்கம் அமைக்க ப்பட்டது.

    இந்த அரங்கில் தஞ்சாவூா் மாவட்டத்தைச் சாா்ந்த 60 எழுத்தாளா்களின் படைப்புகள் இடம்பெற்றன.

    காலையில் நடைபெற்ற இலக்கிய அரங்கத்தில் உள்ளூரைச் சோ்ந்த 31 அறிஞா்கள் பங்கேற்றனா்.

    அஞ்சல் சேவை மூலம் ஏறத்தாழ 50 நூல்கள் அனுப்பப்பட்டன.

    சிறைவாசிகளுக்கான புத்தக தானம் திட்டத்தில் 3 ஆயிரம் நூல்களை பொதுமக்கள் அளித்தனா்.

    அரசுப் பள்ளிகள், இல்லங்களுக்கு ஆயிரத்து 500 நூல்கள் தானம் செய்யப்பட்டது.

    பல்வேறு போட்டிகளில் சுமாா் ஆயிரத்து 500 மாணவா்கள் பங்கேற்றனா்.

    தென்னகப் பண்பாட்டு மையம், கலை பண்பாட்டு துறை ஆதரவுடன் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் சுமார் 500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

    இந்த விழாவுக்கு உணவு அரங்கமும், பண்பாட்டு அரங்கமும் மேலும் பெருமை சோ்த்தது.

    தஞ்சாவூா் மக்களின் மாபெரும் ஆதரவால் இந்த புத்தகத் திருவிழா மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மருத்துவா் சிவராமன் தென்னகப் பண்பாட்டு மைய இயக்குநா் கோபால கிருஷ்ணன், தாமரை பன்னாட்டுப் பள்ளி தலைவா் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×