search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் இதுவரை 14 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல்: ஏ.டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால்
    X

    ஏ.டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடந்த போது எடுத்த படம்.

    தமிழகத்தில் இதுவரை 14 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல்: ஏ.டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால்

    • தமிழகத்தில் கடந்த ஆண்டு 28 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    • கஞ்சா வியாபாரிகளின் 5 ஆயிரம் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

    அண்ணா நகர் :

    சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி சென்னை அண்ணாநகர், வளைவு சந்திப்பில் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற போதை பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாணவர்கள் போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியும், வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் போதைபொருள் தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அந்த வழியாக சென்ற பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி போதை பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கினார்.

    பின்னர் அனைவரும் போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றனர்.

    பின்னர் நிருபர்களிடம் மகேஷ்குமார் அகர்வால் கூறியதாவது:-

    தமிழகத்தில் போதைபொருட்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்கும், அதில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்வதற்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை பெயரில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி தமிழகத்தில் கடந்த ஆண்டு 28 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டில் இதுவரை 14 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக போதைபொருள் விற்பனை செய்தவர்களிடம் இருந்து ரூ.18 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா வியாபாரிகளின் 5 ஆயிரம் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதேபோல் புளியந்தோப்பில் துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் அழகேசன் தலைமையிலும், கொரட்டூரில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற போதை பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    தெற்கு ரெயில்வே சார்பில் நேற்று சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் நடந்த போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில், ரெயில்வே போலீஸ் டி.எஸ்.பி., ரமேஷ் பங்கேற்று, போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    எழும்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரெயில்வே போலீசார் மற்றும் பச்சையப்பா கல்லுரி மாணவர்கள் இணைந்து போதை பொருள் விழிப்புணர்வில் ஈடுபட்டனர். அப்போது, போதை பொருள் உபயோகித்தல் மற்றும் சட்டவிரோதமாக கடத்துதல் தவறானது என்பதை சுட்டிகாட்டும் வகையில் விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தி பேரணி சென்றனர்.

    Next Story
    ×