search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    பாலூட்டும் தாய்மார்
    X
    பாலூட்டும் தாய்மார்

    பாலூட்டும் தாய்மார்களின் கவனத்திற்கு...

    தானியம், பருப்புகள், காய்கள், பழங்கள், முட்டை, பால், மீன், மாமிசம் என்று அனைத்தும் உள்ளடக்கிய சரிவிகித உணவே போதுமான தாய்ப்பால் சுரப்பைக் கொடுக்கிறது.
    குழந்தைப் பேறு முடிந்து வீடு திரும்பிய  பாலூட்டும் பெண்கள், அதன் பிறகு தேவையான ஆலோசனைகளுக்கு  மருத்துவமனைக்குச் செல்ல இயலாததாலும்,  பெரியவர்களும் இல்லாமல் தனியாக இருப்பதாலும்  சிறு சிறு விஷயங்களுக்கும் அதிக குழப்பமடைந்து இருப்பதுபோல் தெரிகிறது. தாய்ப்பாலைப் பற்றி சில அடிப்படையான உண்மைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.

    1. தாயின் உணவில் குறைபாடு இருந்தால், தாய்ப்பாலின் அளவும் குறைகிறது. ஆனால் தரம் குறைவதில்லை.  தாயின் உடலில் சேமிக்கப்பட்டுள்ள புரதம் மற்றும் கொழுப்பு சத்துகளைப் பொருத்தே, தாய்ப்பாலும் அமைகிறது.

    2.சரியான நேர இடைவெளியைக் கடைப்பிடிக்காமல், அடிக்கடி பால் கொடுத்துக் கொண்டே இருப்பதால், பால் சுரப்பைத் தூண்டும் ஹார்மோன்களின் சமநிலை மாறுபட்டு, பால் சுரப்பு குறைகிறது என்பதை நன்றாக நினைவில் வைக்கவேண்டும்.

    3. துவக்கத்தில், ஒருநாளைக்கு 8 முதல் 12 தடவைகள், அதாவது ஒன்றரை அல்லது இரண்டு மணி நேரங்களுக்கு ஒருமுறை தாய்ப்பால் புகட்டினால் போதுமானது. குழந்தை வளர, வளர நேர இடைவெளி அதிகரிப்பது இயல்பான ஒன்றுதான்.

    4. தாய்ப்பாலுக்குப் பதிலாக அல்லது கூடுதலாக கொடுக்கப்படும் எந்தவிதமான செயற்கைத் தயாரிப்பு பால்பொருட்களாலும், தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதில்லை.

    5. குழந்தையின்  சீரான உடல்நிலை, சவுகரியமான சூழல்,  இதமான அரவணைப்பு, வற்புறுத்தலும்  இல்லாத நிலை போன்றவையே குழந்தை போதுமான அளவு தாய்ப்பால் குடிப்பதற்கு வழிவகுக்கிறது. அவ்வாறான நிலையில் குழந்தை குடிக்கும்போது, தாய்ப்பால் சுரப்பும் நன்றாக இருக்கும்.

    6. தானியம், பருப்புகள், காய்கள், பழங்கள், முட்டை, பால், மீன், மாமிசம் என்று அனைத்தும் உள்ளடக்கிய சரிவிகித உணவே போதுமான தாய்ப்பால் சுரப்பைக் கொடுக்கிறது. பூண்டு, பெருங்காயம், மருந்துப்  பொடி போன்ற கூடுதல் சிறப்பு உணவுகள் வேண்டுமெனில் சேர்த்துக் கொள்ளலாம்.

    7. வீட்டு வேலைகளை செய்வதால், உடலுக்கு புத்துணர்வு கிடைக்கப் பெற்று, ஹார்மோன்களின் செயல்பாடுகளும் சீராக இருக்கும். எந்த வேலையும் செய்யாமல் இருப்பதால், உடல் பருமன் ஏற்பட்டு, பல்வேறு சிக்கல்களும் வந்துவிடும். பின் மனஉளைச்சலால் தாய்ப்பால் உற்பத்தியும் பாதிக்கப்படும்.

    8. போதுமான நீர்ச்சத்து உடலில் சேராமல் இருப்பதாலும், தாய்ப்பால் உற்பத்தியின் அளவு குறைகிறது. பால், மோர், பழச்சாறு, சூப், கஞ்சி என்று தாராளமாகக் குடியுங்கள்.

    9. முதலில், சோறு வடித்த கஞ்சித் தண்ணீரை குடிக்கப் பழகுங்கள். நீரிழிவு இருப்பவர்கள் தவிர்த்துக் கொள்ளலாம். இதற்கு காரணம், முழுவதும் கார்போஹைடிரேட் ஆக இருக்கும். கஞ்சித் தண்ணீரை, தாயின் அன்றாட செயலுக்கான ஆற்றலை உடல்  நேரடியாக எடுத்துக் கொள்வதால், பிற உணவிலுள்ள புரதமும் கொழுப்பும் சேமிக்கப்பட்டு, தாய்ப்பால் உற்பத்திக்குப் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது.

    10. எந்த பிரச்சினையாக இருந்தாலும், தாய்பால் புகட்டுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னர் உடலையும், மனதையும் தளர்வாக்கி,  ஆசுவாசப்படுத்திக்க கொண்டு, அமைதியான நிலையில், அரவணைப்புடன், முழு சந்தோஷத்துடன், குழந்தையின் நலனை மட்டுமே மனதில் நினைத்துபப் பாலூட்டினால், தாய், சேய் இருவரின் நலனும் நன்றாக இருக்கும்.

    -முனைவர். வண்டார் குழலி ராஜசேகர்
    Next Story
    ×