என் மலர்
செய்திகள்

அனைத்தையும் இந்துத்துவா மயமாக்க பா.ஜனதா முயற்சி - வைகோ கண்டனம்
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அடுத்த ஆண்டு முதல் நீட் நுழைவுத் தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப் போகிறோம். சி.பி.எஸ்.இ. நிர்வாகத்திற்குப் பதிலாக தேசிய தேர்வு முகமை மூலம் நீட் தேர்வு நடத்தப்படும் என்றும், இணையம் மூலம் தேர்வுகள் நடைபெறும் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘நீட்’ தேர்வில் குளறுபடிகள் நடந்ததற்குக் காரணம் அவசர கோலத்தில் அள்ளித் தெளித்து சி.பி. எஸ்.இ. நிர்வாகம் தேர்வுகளை நடத்தியதுதான். தற்போதும் முறையான திட்டமிடல் மற்றும் தேர்வு நடத்துவதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்காமல், ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு நடத்தப்படும் என்றும், எழுத்துத் தேர்வாக இல்லாமல் கணினி வழித் தேர்வாக நடத்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
கணினி வழித் தேர்வு என்பது கிராமப்புற மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
11 மொழிகளில் நடத்தப்படும் ‘நீட்’ நுழைவுத் தேர்வை, எட்டு அமர்வுகளில் நடத்தினால் நாடு முழுவதும் ஒரே தரவரிசைப் பட்டியலை எப்படி வெளியிட முடியும்? என்று நியாயமான கேள்வியை கல்வியாளர்கள் எழுப்பி உள்ளனர்.
ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய, கிராமப்புற மாணவர்கள் எந்த நிலையிலும் “மருத்துவக் கல்வி பெற்றுவிடக்கூடாது” என்று சமூக நீதிக்கு சவக்குழி தோண்டும் வேலையை மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவது கடுமையான கண்டனத்துக்கு உரியதாகும்.
மாநில உரிமைகளை காலில்போட்டு மிதித்து கூட்டாட்சி கோட்பாட்டையே சிதைத்து வரும் மத்திய பா.ஜ.க அரசிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே வரி மற்றும் ஒரே நுழைவுத் தேர்வு என்று அனைத்தையும் ஒற்றை இந்துத்துவ தேசிய மயமாக்கும் பா.ஜ.க. அரசின் பாசிச திட்டங்களை ஜனநாயக முற்போக்குச் சக்திகள் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார். #bjp #Vaiko






