என் மலர்
செய்திகள்

தமிழகத்தில் இரட்டை ஆட்சி நடக்கிறது: மு.க.ஸ்டாலின் பேச்சு
திருச்சி:
மறைந்த தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் இல்ல திருமண விழா திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடை பெற்றது. இதில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களான திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்திகேயன்- வந்தனா திருமணத்தை நடத்தி வைத்தனர். பின்னர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
திருமண விழாக்களில் அரசியல் பேசுவதில் எந்த தவறும் இல்லை. ஏனென்றால் நாட்டில் உள்ள தற்போதைய நிலை அனைவருக்கும் தெரியும். தமிழகத்தில் உள்ள ஆட்சி எப்போது அப்புறப்படுத்தப்படும் என தமிழக மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.
ஏனென்றால் மாநில உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும், மத்திய அரசுக்கு கட்டுப்பட்டு கவர்னர் தலைமையிலும் என இரட்டை ஆட்சி நடக்கிறது. இதனால் மாநில உரிமை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களை பற்றி இந்த அரசுக்கு எந்த கவலையும் இல்லை.
காவிரி மீட்பு வெற்றி விளக்க பொதுக்கூட்டத்தை அ.தி.மு.க.வினர் நடத்தி வருகிறார்கள். அதில் முதல்வர், துணை முதல்வர் பற்றி அமைச்சர்கள் புகழ்ந்து பேசுகிறார்கள். ஆனால் காவிரி பிரச்சினையில் முழுமையான வெற்றி கிடைத்திருக்கிறதா? என்றால் இல்லை. கொஞ்சம் பெருமூச்சு விட்டு கொள்ளலாம், அவ்வளவு தான்.
நேற்று கர்நாடக முதல்வர் குமாரசாமி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பை அழிக்கும் வகையில் அவர்கள் உச்சநீதிமன்றத்திற்கு செல்ல முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அது பற்றி எங்களுக்கு கவலையில்லை என்கிறார். அவருக்கு இதில் மட்டும் கவலையில்லை. நீட் தேர்வு, ஸ்டெர்லைட், 8 வழிச்சாலை பாதிப்பு ஆகியவற்றை பற்றியும் கவலையில்லை. அவருக்கு கவலை எல்லாம் ஆட்சி தக்க வைப்பதில்தான் உள்ளது.
மக்களை பற்றி கவலைப்படாத இந்த ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டுமென மக்கள் கூறுகிறார்கள். அதன்படி இந்த ஆட்சியை அகற்ற இது போன்ற திருமண விழாக்களில் பங்கேற்பவர்கள் உறுதியேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் வரவேற்று பேசினார். முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு வாழ்த்தி பேசினார். முன்னாள் அமைச்சர்களும் எம்.எல். ஏ.க்களுமான கே.என். நேரு, பொன்முடி மற்றும் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சவுந்திரபாண்டியன், ஸ்டா லின்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.வீரபாண்டி ராஜா உள்பட பலர் கலந்து கொண் டனர். முடிவில் முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில் பெரியசாமி நன்றி கூறினார். #mkstalin #tngovt #governorbanwarilalpurohit






