search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு- தமிழக அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் - முத்தரசன் குற்றச்சாட்டு
    X

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு- தமிழக அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் - முத்தரசன் குற்றச்சாட்டு

    ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு ஆதரவாக தமிழக அரசு திட்டமிட்டு நடத்திய தாக்குதல் சம்பவமே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு என்று முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். #SterliteProtest #ThoothukudiShooting

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு ஆதரவாக தமிழக அரசு திட்டமிட்டு நடத்திய கொடூரமான தாக்குதல் சம்பவமே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு. இனி மக்கள் போராட நினைக்கக்கூடாது என்பதற்காக, மக்களை அச்சுறுத்தும் விதமாக இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

    இந்த ஆலை தொடர்பாக அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் அறிவிக்கும் அறிவிப்புகள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு பிறப்பித்த அரசாணை மக்களை ஏமாற்றும் நாடகம்.

    துப்பாக்கிச் சூடுக்கு உத்தரவிட்ட துணை வட்டாட்சியர்கள், உயரதிகாரிகளிடம் தெரிவித்து அனுமதி மற்றும் ஆலோசனை பெறாமல் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட முடியாது. இந்த சம்பவம் குறித்து பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும்.

    போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சமூக விரோதிகள் என தமிழக முதல்வரும், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் ஒரே குரலில் பேசுகின்றனர். சமூக விரோதிகளால் தான் இந்த துரதிருஷ்டமான சம்பவம் நிகழ்ந்தது எனக் கூறுகின்றனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் அப்பாவி மக்கள்.

    துப்பாக்கிச் சூட்டில் பலியான 10-ம் வகுப்பு மாணவி சமூக விரோதியா. இது உரிமைக்காக போராடும் மக்களை அவமதிக்கும் செயல், கண்டனத்துக்குறிய செயல். இதற்காக தமிழக மக்களிடம் முதலமைச்சரும், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும்.

    உடனடியாக காவிரி நதி நீர் ஆணையத்தை அமைத்து, முழு அதிகாரம் பெற்ற அமைப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்கவேண்டும். மே மாத இறுதிக்குள் காவிரி நதி நீரை மேட்டூருக்கு கொண்டுவர தமிழக அரசு, மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டும். அதிகாரம் மிக்க ஆணையத்தை அமைக்கவும் பெற்றுத்தரவும் உரிய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இல்லையெனில் குறுவை சாகுபடி சாத்தியமில்லாமல் போய்விடும்.

    தமிழகத்தில் இரட்டை ஆட்சி நடைபெறுகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிகாரமில்லாத ஆட்சியும், ஆளுநர் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு அதிகாரமிக்க இன்னொரு ஆட்சியும் நடத்துகிறார். மாநில உரிமையில் தலையிடும் இந்த நடவடிக்கையை தமிழக அரசு கண்டிக்க வேண்டும். ஆனால், இங்கிருக்கும் அரசு ஆளுநர் நடவடிக்கையை நியாயப்படுத்துகிறது.

    மோடி அரசு 4 ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியதா? ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை, விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்குவோம் என கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. மத்திய அரசு அரசியலமைப்பு சட்டத்தை காலில் போட்டு மிதிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஞானசேகரன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜேந்திரன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். #SterliteProtest #ThoothukudiShooting

    Next Story
    ×