search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி பிரச்சினையில் குமாரசாமி யோசனை மிகவும் ஆபத்தானது - ராமதாஸ்
    X

    காவிரி பிரச்சினையில் குமாரசாமி யோசனை மிகவும் ஆபத்தானது - ராமதாஸ்

    காவிரிப் பிரச்சினையில் குமாரசாமி யோசனை மிகவும் ஆபத்தானது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #CauveryManagementBoard #Ramadoss #Kumaraswamy

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசும், கர்நாடக அரசும் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் தான் காவிரிப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என்று கர்நாடகத்தின் புதிய முதல்-அமைச்சராக பதவி ஏற்கவுள்ள குமாரசாமி கூறியுள்ளார். குமாரசாமியின் இந்த யோசனை மிகவும் ஆபத்தானது. காவிரியில் தமிழகத்திற்கு உள்ள கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் தட்டிப்பறிக்கும் செயலாகும்.

    காவிரிப் பிரச்சினையில் தீர்வு காண்பதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது.


    இந்த ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளை கர்நாடக அரசு செயல்படுத்தினால் காவிரிப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட்டு விடும். எனவே, காவிரிப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று குமாரசாமி நினைத்தால், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை செயல்படுத்தும் என்று அறிவிக்க வேண்டும்.

    ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக காவிரிப் பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு காண வேண்டும் என்றால் தமிழகமும், கர்நாடகமும் பேச்சு நடத்த வேண்டும் என்று கூறுவது உச்சநீதி மன்றம் போன்ற சட்ட அமைப்புகளையும், தமிழக மக்களையும் முட்டாள் களாக்கும் செயலாகும்.

    காவிரிப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வி‌ஷயத்தில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தமிழகத்திற்கு முழுமையான திருப்தி அளிக்கவில்லை என்றாலும் கூட இன்றைய நிலையை எட்ட தமிழகம் பட்ட பாடுகளும், நடத்திய சட்டப் போராட்டங்களும் ஏராளமானவை.

    காவிரி சிக்கல் எந்த இடத்தில் தொடங்கியதோ அந்த இடத்திற்கே மீண்டும் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் காவிரி சிக்கலை பேசித்தீர்க்க வேண்டும் என்று கர்நாடகத்தின் புதிய முதல்-அமைச்சராக பதவி ஏற்கவுள்ள குமாரசாமி கூறியுள்ளார்.

    தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சித் தலைவர்களும் இந்தப்பிரச்சனையின் ஆழம் புரியாமல் கர்நாடக அரசுடன் பேசி காவிரிப் பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்று கூறிவருகின்றனர். இந்த யோசனைகள் காவிரிப் பிரச்சனையை தீர்ப்பதற்குப் பதிலாக மேலும் சிக்கலாக்கி விடும்.

    எனவே, காவிரிப் பிரச்சனை தொடர்பாக கர்நாடக அரசுடன் எந்த காலத்திலும் தமிழக அரசு பேச்சு நடத்தக் கூடாது. மாறாக காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளையும் காவிரி மேலாண்மை ஆணையத்திடம் ஒப்படைக்க வைப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #CauveryManagementBoard  #Ramadoss #Kumaraswamy

    Next Story
    ×