என் மலர்
செய்திகள்

சென்னை வெள்ளத்தில் மூழ்கும் என்று கமல் வதந்தி பரப்புகிறார்: உதயகுமார் குற்றச்சாட்டு
மதுரை:
மதுரையில் இன்று காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளையொட்டி “ஒற்றுமை ஓட்டம்” நடந்தது. இதை அமைச்சர் உதயகுமார் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எண்ணூரில் கொசஸ்தலை ஆற்றை கமல்ஹாசன் பார்வையிட்டதில் மக்கள் நலன் இல்லை. சொந்த நலன் தான் இருக்கிறது. அவருக்கு மக்கள் நல்ல பாடம் கற்றுத்தருவார்கள்.
சென்னை நகரம் வெள்ளத்தில் மூழ்கும் என்று அவர் வதந்தி பரப்புகிறார். அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும், மக்களிடம் பீதியையும் ஏற்படுத்தினால் கமல்ஹாசன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரம், தமிழக அரசை பொம்மை அரசு என்றும், இதனை ஆட்டி வைப்பவர் டெல்லியில் இருக்கிறார் என்றும் பேசி இருக்கிறார்.
நிதி அமைச்சராக இருந்த அவர் தேர்தலை சந்திக்காமல் ஓடியவர்.
வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. மக்கள் அச்சப்படாத வகையில் தேவையான அனைத்தையும் செய்துள்ளோம். அதற்கான பணிகள் 99 சதவீதம் முடிந்த நிலையில், ஒரு சதவீத பணிகள் கூட முடியவில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறுவது அரசியல் காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது.
இந்த ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும் என்று டி.டி.வி.தினகரன் பலமுறை கூறி உள்ளார். அது நடந்துள்ளதா? அதேபோல பொங்கல் பண்டிகைக்குள் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று கூறுவதும் நடக்காது.
ஜெயலலிதா உருவாக்கிய இந்த ஆட்சி தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.