என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஜினி-கமல் அரசியலுக்கு வந்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள்: சிங்கமுத்து பேச்சு
    X

    ரஜினி-கமல் அரசியலுக்கு வந்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள்: சிங்கமுத்து பேச்சு

    நடிகர்கள் கமலஹாசன், ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று நடிகர் சிங்கமுத்து பேசினார்.

    ஈரோடு:

    ஈரோடு பெரியார்நகர் அ.தி.மு.க.சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் நடந்தது. கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார். எம்.பி.செல்வகுமார சின்னையன், பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், சூரம்பட்டி ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளரும், நடிகருமான சிங்கமுத்து கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது.-

    நடிகர் கமலஹாசன் கடந்த சில நாட்களாக அ.தி.மு.க.வை தொடர்ந்து குறை கூறிவருகிறார். இவர் பேசுவதில் அண்ணன் விஜயகாந்தை போன்றவர்.காரணம் இரண்டு பேரும் பேசுவது யாருக்கும் புரியாது.

    கமல் அரசியலுக்கு தாராளமாக வரலாம். ஆனால் மக்கள் பணியாற்றும் இந்த அரசை குறை கூறுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். முதலில் நீங்கள்(நடிகர் கமலஹாசன்) களத்தில் இறங்கி மக்கள் பணியாற்றுங்கள். அப்புறம் அரசியல் பணியாற்றலாம். இது போதாதது என்று ரஜினியையும் தன்னுடன் அரசியலில் இணைந்து கொள்வேன் என்கிறார்.

    ஜனநாயக நாட்டில் மக்கள் ஓட்டு போட்டால் யாரும் வேண்டுமானாலும் முதல்-அமைச்சர் ஆகலாம். தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வை தவிர மக்கள் வேறு யாருக்கும் வாக்களிக்க மாட்டார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த நாட்டுக்கு தேவையா?.


    நடிகர் ரஜினிகாந்த இளம் வயதில் ரத்த ஓட்டம் இருக்கும் போது நடிக்க போய்விட்டார்.இப்போது வயதாகி முதுமை கண்டு விட்டார். இனி அவர் அரசியலுக்கு வந்து எந்த பலனும் இல்லை.

    இப்போது முடிந்தால் மக்களுக்கு சேவை செய்வேன் என்று ரஜினி கூறுகிறார். நீங்கள் சம்பாதித்த பணத்தில் இது வரை எவ்வளவு பணத்தை மக்களுக்காக செலவு செய்தீர்கள்?. நீங்கள் நடியுங்கள், சம்பாதிங்கள். ஆனால் ஆட்சி செய்ய ஆசைப்படாதீர்கள். இல்லை என்றால் சொத்துகளை எல்லாம் ஏழைகளுக்கு எழுதி வைத்து விட்டு அரசியலுக்கு வாருங்கள்.

    நடிகர்கள் கமலஹாசன், ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள். தமிழக மக்கள் தன்மானம் மிக்கவர்கள். இனி தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள்வான்.

    இவ்வாறு நடிகர் சிங்கமுத்து பேசினார்.

    Next Story
    ×