search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரட்டை இலையை ஒப்படைக்கக்கோரி வழக்கு: ஓ.பி.எஸ்., சசிகலா - தினகரனுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
    X

    இரட்டை இலையை ஒப்படைக்கக்கோரி வழக்கு: ஓ.பி.எஸ்., சசிகலா - தினகரனுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

    பெரும்பான்மை அணியிடம் இரட்டை இலையை ஒப்படைக்கக்கோரிய வழக்கில் ஓ.பி.எஸ்., சசிகலா, தினகரனுக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
    மதுரை:

    திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டதால் 45 ஆண்டுகளாக அ.தி.மு.க.வின் அதிகார பூர்வ சின்னமாக இருந்து வந்த இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.



    அதனை மீண்டும் பெறுவதற்காக அ.தி.மு.க. அணிகள் சார்பில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களின் பிரமாண பத்திரங்கள் உள்பட பல்வேறு ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது அ.தி.மு.க. 3 அணியாக பிரிந்துள்ளது.

    காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சியில் பிளவு ஏற்பட்ட போது அதிக பெரும்பான்மை உள்ள பிரிவுக்கு கட்சியின் அதிகாரபூர்வ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

    இந்த முறையை பின்பற்றி அ.தி.மு.க.விலும் அதிக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் ஆதரவு உள்ளவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்க வேண்டும்.

    தென்னிந்திய சினிமா வர்த்தக சபை தேர்தலில் பிரச்சினை எழுந்த போது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தேர்தல் நடத்தப்பட்டது.

    இதை பின்பற்றி ஓய்வு பெற்ற நீதிபதி முன்னிலையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன் அணியிலுள்ள அ.தி.மு.க.வின் அனைத்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்கும் கூட்டுக்கூட்டத்தை கூட்ட வேண்டும்.

    அப்போது நிர்வாகிகள் தேர்தலை நடத்தி யாருக்கு ஆதரவு என்பதை கண்டறிய வேண்டும். வெற்றி பெறும் அணியிடம் சின்னத்தை ஒப்படைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று நீதிபதிகள் கூறினர்.



    அதே வேளையில் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு இந்திய தலைமை தேர்தல் ஆணையர், அவைத்தலைவர் மதுசூதனன், துணை முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் விசாரணையை செப்டம்பர் 13-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    Next Story
    ×