என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசை டெல்லியில் உள்ளவர்கள் ஆட்டி படைக்கிறார்கள்: கி.வீரமணி பேச்சு
    X

    தமிழக அரசை டெல்லியில் உள்ளவர்கள் ஆட்டி படைக்கிறார்கள்: கி.வீரமணி பேச்சு

    தமிழக அரசை டெல்லியில் உள்ளவர்கள் ஆட்டி படைக்கிறார்கள் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

    ஈரோடு:

    திராவிடர் கழகம் சார்பில் சமூக நீதி, மதசார்பின்மை மாநில உரிமை விளக்க பொதுக்கூட்டம் ஈரோட்டில் நேற்று இரவு நடந்தது.

    கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் நற்குணன் தலைமை தாங்கினார். தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி, தி.க. அமைப்பு செயலாளர் சண்முகம், பேராசிரியர் காளிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது.-

    புதுடெல்லியில் உள்ளவர்கள் ஆட்டி வைப்பதற்கு ஏற்ப இங்குள்ளவர்கள் ஆடி கொண்டு இருக்கிறார்கள். இதனால் தான் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    பெரியாரின் போராட்டத்தால் அன்று அனைவரும் மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பிக்க முடிந்தது. காமராஜர் முதல் நமது தமிழக முதல்- அமைச்சர்கள் கொண்டு வந்த 22 அரசு மருத்துவக்கல்லூரிகள் நமக்காக கட்டப்பட்டவை.தமிழக அரசு ஒப்புதல் இன்றி சமூக நீதி எதிராக நீட் தேர்வினை பா.ஜனதா அரசு திணித்து உள்ளது.

    நீட் தேர்வில் வெற்றி பெற்ற முதல் 30 பேர் பட்டியலில் ஒரு தமிழர் பெயராவது இருக்கிறதா? பிளஸ்-2 பொது தேர்வில் 119.25 கட்- ஆப் மதிப்பெண் பெற்ற தாழ்த்தப்பட்ட மாணவிக்கு இடம் இல்லை.

    எனவே சமூக நீதிக்கும் மாநில உரிமைக்கும் எதிரான நீட்தேர்வு ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும். அரியானா போன்று கலவரம் ஏற்படுத்தும் போராட்டம் அல்ல. இது பெரியாரின் வழியில் போராட்டம். காவிகளின் போராட்டம் அல்ல. பெரியாரின் கொள்கை இருக்கும் வரை இங்கு மதவாதம் வளர முடியாது.

    பா.ஜனதா நீட்தேர்வு மூலம் மத்திய பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத்தை கலக்க நினைக்கிறது. இது மிக பெரிய சூழ்ச்சி வலை, அதை முறியடிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×