search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்வராக முடியாது என்ற பயத்தில் பல்வேறு குறைகளை கூறி வருகிறார் மு.க.ஸ்டாலின்: தமிழிசை பாய்ச்சல்
    X

    முதல்வராக முடியாது என்ற பயத்தில் பல்வேறு குறைகளை கூறி வருகிறார் மு.க.ஸ்டாலின்: தமிழிசை பாய்ச்சல்

    மத்திய, மாநில அரசுகள் நிலைத்துவிட்டால் முதல்வராக முடியாது என்ற பயத்தில் மு.க.ஸ்டாலின் பல்வேறு குறைகளை கூறி வருகிறார் என தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    திருச்சி:

    திருச்சியில் இன்று பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தில்லை நகரில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.

    கூட்டத்திற்கு பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். இதில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் எம்.பி., வானதி சீனிவாசன், தேசிய அமைப்பு செயலாளர் ஸ்ரீதர் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு தொடர்ந்து பல நல்ல திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. மத்திய அரசுக்கு மாநில அரசின் ஒத்துழைப்பு தற்போது பரவாயில்லை. தமிழகத்திற்காக ஏராளமான திட்டங்களையும் அறிவித்து வருகிறது. ஆனால் மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தவறானது.

    மெட்ரோ ரெயில் திட்டம், உதய் மின் திட்டம் என பல திட்டங்களை தமிழகத்தில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. உதய் மின் திட்டத்தால் தமிழகத்தில் மின் கட்டணம் உயராது. உதய் மின் திட்டத்திற்கு தமிழக அரசு வைத்திருந்த ரூ.86 ஆயிரம் கோடி கடன் பாக்கியை மத்திய அரசு செலுத்தி உள்ளது.



    மத்திய மந்திரி வெங்கையா நாயுடு, தமிழகத்தில் வீடுகள் கட்டும் திட்டத்திற்கு ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். கோவையில் ரூ.1,000 கோடியில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டப்பட உள்ளது. தமிழக மீனவர்கள் ஆழ் கடலில் மீன்பிடிக்க வசதியாக ரூ.200 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

    கூவம் நதியை சுத்தம் செய்ய ரூ.400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சொட்டு நீர் திட்டம், ஏரிகள் தூர்வார என கோடிக்கணக்கில் மத்திய அரசு நிதியை ஒதுக்கியுள்ளது. மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டம் 105 நாட்களாக உயர்த்தி அதற்கான நிதியும் உயர்த்தப்பட்டுள்ளது.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் அதிக பட்சமாக 33 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இப்படி ஏராளமான திட்டங்களை மத்திய அரசு செய்து கொண்டுதான் இருக்கிறது.

    மாட்டிறைச்சி விவகாரத்தை போராட்டம் என்று கூறி கொடூரமான முறையில் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. பால் தரும் பசு தாய் போன்றது. தமிழக மக்கள் பசுவை தெய்வமாக நினைத்து போற்றுகிறார்கள். ஆனால் பசுக்களை கடத்தி சென்று கொல்கிறார்கள் என்பதை தடுப்பதற்காகத்தான் மத்திய அரசு வரைமுறைப்படுத்தி உள்ளது. இதனை தவறாக புரிந்துகொள்ள கூடாது.



    சென்னை ஐ.ஐ.டி. மாணவர் சூரஜ் தாக்கப்பட்ட சம்பவத்தில் பா.ஜ.க.வை தேவையின்றி விமர்சிக்கிறார்கள். தமிழகத்தில் அனுமதி பெற்ற மாட்டிறைச்சி கூடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதா? என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.



    இந்த விவகாரத்தில் மீண்டும் மெரீனா புரட்சி வெடிக்கும் என்று தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டா லின் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. மத்திய, மாநில அரசுகள் நிலைத்துவிட்டால் தான் முதல்வராக முடியாது என்ற எண்ணத்தில் கூறுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×