என் மலர்
செய்திகள்

எடப்பாடிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியது ஏன்?: பரபரப்பு தகவல்
சேலம்:
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னால் அ.தி.மு.க. 2 அணியாக உடைந்தது. அ.தி.மு.க. அம்மா அணி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலும் செயல்பட்டு வருகிறது.
அ.தி.மு.க. அம்மா அணியில் உள்ள 11 எம்.எல்.ஏக்கள் நேற்று சென்னையில் ரகசியமாக கூடி ஆலோசனை நடத்தி உள்ளனர்.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தோப்பு வெங்கடாசலம், செந்தில் பாலாஜி, பழனியப்பன் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.
இந்த ரகசிய ஆலோசனை கூட்டம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ஒரே அமைச்சராக (சுற்றுச்சூழல் துறை) இருந்தவர் தோப்பு வெங்கடாச்சலம்.
மாவட்டத்தில் இவரது கை மேலோங்கி இருந்தது. ஒரே அமைச்சர் என்ற தோரணையில் ஈரோடு மாவட்டத்தில் உலா வந்தார். இவருக்கு மாவட்டத்தில் தனிப்பட்ட செல்வாக்கும் இருந்தது.
ஜெயலலிதா 2-வது தடவையாக முதல்வராக பதவி ஏற்ற பிறகு தோப்பு வெங்கடாச்சலத்துக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை. அவரிடம் இருந்த ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு செங்கோட்டையன் கை ஓங்கியது. சசிகலா தரப்பினர் செங்கோட்டையனை தங்கள் பக்கம் இழுத்து கொங்கு மண்டலத்தை தங்கள் கையில் வைத்துக் கொள்ள அவருக்கு பள்ளி கல்வி துறை அமைச்சர் பதவியையும் வழங்கினர். இதனால் செங்கோட்டையனின் செல்வாக்கு மீண்டும் உயர்ந்தது.
இதனால் அதிருப்தியில் காணப்பட்ட தோப்பு வெங்கடாச்சலம் சமீபத்தில் ஈரோட்டில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட விழாவை பகிரங்கமாக புறக்கணித்தார். அதே நேரத்தில் பெருந்துறையில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இதன் மூலம் அரசுக்கு எதிராக தோப்பு வெங்கடாச்சலம் தரப்பினர் ஒரு தனி அணி உருவாக்கி வருவது வெட்ட வெளிச்சமாகி விட்டது.
11 எம்.எல்.ஏ.க்கள் கூடிய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சரும், தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப் பட்டி தொகுதி எம்.எல்.ஏ.வு மான பழனியப்பன் கலந்து கொண்டார். இவர் ஜெயலலிதா அமைச்சரவையில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது தர்மபுரி மாவட்டத்தில் தனக்கென ஆதரவாளர்களை உருவாக்கினார்.
பழனியப்பனால் புறக்கணிக்கப்பட்ட கே.பி.அன்பழகன் தற்போது உயர்கல்வித்துறை அமைச்சராக உள்ளார். அவர் பழனியப்பனை புறக்கணிக்கிறார். இதனால் கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பழனியப்பன் கலந்து கொள்வது இல்லை.
கடந்த முறை ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது பா.ம.க. வேட்பாளர் அன்புமணி வெற்றிபெற பழனியப்பன் உதவியதாக முன்னாள் அமைச்சர் ஒருவர் புகார் செய்தார். இதனால் பழனியப்பன் பதவி பறிக்கப்பட்டது. அவருக்கு முதலில் சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டது.
அதன் பிறகு அவர் போராடித்தான் சீட் வாங்கினார். அ.தி.மு.க.வினர் சரியான ஒத்துழைப்பு கொடுக்காததால் மிகவும் போராடித்தான் ஜெயித்தார். தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். கிடைக்க வில்லை.
தனக்கு எதிராக அமைச்சர் கே.பி.அன்பழகன் செயல்படுவதால் மனம் உடைந்த பழனியப்பன் மாவட்ட அமைச்சருக்கு எதிராகவும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் வேறு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது.
நாமக்கல்லில் தற்கொலை செய்து கொண்ட அமைச்சர் விஜய பாஸ்கரின் நண்பரும், காண்டிராக்டருமான சுப்பிரமணியம் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தற்கொலைக்கு முன்பு சுப்பிரமணியம் கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தில் பழனியப்பன் பெயரையும் குறிப்பிட்டு இருந்தார். பழனியப்பன் பினாமியாக செயல்பட்ட தென்னரசு கடந்த 6 வருடங்களாக தன்னை மிரட்டியதாக கூறி இருந்தார்.
இந்த வழக்கில் பழனியப்பனுக்கு சம்மன் அனுப்பி சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்து இருந்தனர்.
இதை தெரிந்து கொண்ட பழனியப்பன் தனக்கு சம்மன் வருவதை தடுக்கவும், சி.பி.சி.ஐ.டி. போலீசார் தன்னிடம் விசாரணை நடத்த உள்ளதை தடுக்கவும் ஆலோசனை நாடகத்தை கையில் எடுத்து இருப்பதாக கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
ஏற்கனவே கரூரில் அரசு மருத்துவக் கல்லூரி விவகாரத்தில் போராட் டத்தை கையில் எடுத்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மிரட்டல் விடுத்தார்.
ஆனால் ஒருவாரம் மட்டுமே பரபரப்பு இருந்தது. அதன் பிறகு போராட்டமும் இல்லை. செந்தில் பாலாஜி பேச்சும் இல்லை. அதை போலத்தான் பழனியப்பன் விவகாரமும் ஒன்றும் இல்லாமல் ஆகிவிடும் என்றும் அந்த நிர்வாகி தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையில் தற்போது பழனியப்பன் தனக்கு ஆதரவாக செயல் பட்டு வரும் எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். அவர்களுடன் பழனியப்பன் ரகசிய ஆலோசனையும் நடத்தி வருகிறார். பழனியப்பன் அணியில் 20 எம்.எல்.ஏக்கள் இருப்பதாக அவரது ஆதரவாளர் ஒருவர் தெரிவித்தார்.
ரகசிய ஆலோசனை நடத்தியது தொடர்பாக பழனியப்பனிடம் கருத்து கேட்க அவரது செல்போனை தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவரது உதவியாளரை தொடர்பு கொண்டபோது அவர் போனை எடுக்க வில்லை.