search icon
என் மலர்tooltip icon

    கர்நாடகா தேர்தல்

    காங்கிரஸ் கட்சி பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது- பிரசாரத்தில் பிரதமர் மோடி ஆவேசம்
    X

    காங்கிரஸ் கட்சி பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது- பிரசாரத்தில் பிரதமர் மோடி ஆவேசம்

    • பழங்குடியின குழந்தைகளுக்காக 400-க்கும் மேற்பட்ட ஏக்லவ்யா பள்ளிகளை தொடங்கியுள்ளோம்.
    • காங்கிரஸ் மற்றும் ஜனதள கட்சி ஆட்சியில், திட்டப்பணிகள் மந்தகதியில் நடந்தன.

    பெங்களூரு:

    கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் 2-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கினார். சித்ரதுர்கா அருகே செல்லகெரேயில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது:-

    கர்நாடகத்தில் ஏழைகளின் குழந்தைகளுக்காக மருத்துவக் கல்லூரி மற்றும் பொறியியல் தேர்வுகளை கன்னடத்தில் எழுத பா.ஜ.க. அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இதன் மூலம் கிராமப்புற குழந்தைகள் பயன்பெறுவார்கள். விவசாயிகளுக்கான நிதி யோஜனா திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம்.

    பழங்குடியின குழந்தைகளுக்காக 400-க்கும் மேற்பட்ட ஏக்லவ்யா பள்ளிகளை தொடங்கியுள்ளோம். பழங்குடியினர் மேம்பாட்டுக்காக பட்ஜெட்டில் கால் லட்சம் கோடி ஒதுக்கியுள்ளோம். பா.ஜனதாவின் வளர்ச்சியை காங்கிரசால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. 9 ஆண்டுகளில் பா.ஜ.க. அரசு பல மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கியுள்ளது. சித்ரதுர்காவிலும் மருத்துவக் கல்லூரி தொடங்கினோம். செவிலியர் கல்லூரியை தொடங்கியுள்ளோம். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கும், ஓபிசி பிரிவினருக்கும் பல திட்டங்களை வழங்கியுள்ளோம்.

    பழங்குடியினருக்கு பல நல்ல திட்டங்களை வழங்கியுள்ளோம். பஞ்சாரா மற்றும் லம்பாணி சமூகத்தினருக்கு உரிமை வழங்கியுள்ளோம். நிலமற்றவர்களுக்கு நிலம் கொடுத்துள்ளோம். குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியுள்ளோம். 7 சுற்று பாதுகாப்பு கோட்டை போல 7 விதமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். முதலில் ஆவாஸ் யோஜனா, எரிவாயு, தண்ணீர். 2-வது திட்டம் பிரதி மனேகு ரேஷன், மூன்றாவது திட்டம் ஆயுஷ் மான் பாரத் திட்டம். 4-வது திட்டமாக முத்ரா யோஜனாவும், 5-வது திட்டமாக பீமா யோஜனாவும், 6-வது யோஜனாவாக பெண்களுக்கான பாதுகாப்பும், 7-வது திட்டமாக ஜன்தன் யோஜனாவையும் செயல்படுத்தியுள்ளோம்.

    காங்கிரஸ் மற்றும் ஜனதள கட்சி ஆட்சியில், திட்டப்பணிகள் மந்தகதியில் நடந்தன. பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வந்ததும் ரெயில்வே, சாலை, விமான நிலையங்கள் அமைக்க வேகம் கொடுத்தோம். கர்நாடகாவில் 9 தொழில் மண்டலங்களை அமைப்போம். சித்ரதுர்காவிலும் 1 தொழிற்பேட்டை அமைப்போம். இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

    காங்கிரஸ் கட்சி தொடக்கத்தில் இருந்தே தீவிரவாதிகளை ஆதரித்து வருகிறது. தீவிரவாதிகள் கொல்லப்பட்ட போது காங்கிரஸ் தலைவர்கள் கண்ணீர் விட்டனர். மாநிலத்திலும் காங்கிரஸ் தலைவர்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக நிற்கின்றனர். வெளியில் இருந்து பார்த்தால் காங்கிரசும், ஜே.டி.எஸ்.சும் வெவ்வேறு கட்சிகளாகத் தோன்றினாலும், உள்ளுக்குள் அவை ஒன்றுதான். இரண்டு கட்சிகளும் குடும்ப அரசியலையும் ஊழலையும் செய்கின்றன. சமுதாயத்தை உடைக்கிறார்கள்.

    இரண்டு கட்சிகளின் முக்கியத்துவமும் மாநில வளர்ச்சி அல்ல. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வராது என்பது காங்கிரஸ் தலைவர்களுக்கே தெரியும். எனினும் பொய்யான வாக்குறுதிகள் அளித்து வருகின்றனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பா.ஜ.க.வின் அனைத்து திட்டங்களையும் அழித்து விடுவார்கள். காங்கிரஸ் கட்சியினர் என்னை 90 முறை திட்டியுள்ளனர்.

    மே 10-ந் தேதி தேர்தலில் தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள். இந்த முறை பெரும்பான்மை பெற்று பா.ஜ.க. ஆட்சி அமைக்கவேண்டும். தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று ஒவ்வொருவரையும் சந்தித்து பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க சொல்லுங்கள். உங்கள் ஆசீர்வாதம் எனக்கு பலம் தருகிறது. இது என்னை அதிக வேலை செய்ய உத்வேகம் அளிக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×