search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மனஅழுத்தம்
    X
    மனஅழுத்தம்

    புதுப்புது கவலை.. தீராத அவஸ்தை..

    மனதை பாதிக்கும் சம்பவங்கள் நடக்கும்போது இதுபோன்ற அறிகுறிகள் தொடர்ந்து நீடித்தால் மன நல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமானது.
    பிரச்சினைக்குரிய விஷயத்தை பற்றி அதிக நேரம் சிந்தித்துக்கொண்டிருப்பது மனக் கவலையை உருவாக்கும். கவலைக்குரிய சம்பவங்களை மறந்து சில மணி நேரங் களிலோ, ஓரிரு நாட்களிலோ இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டால் பிரச்சினை இல்லை. தொடர்ந்து அந்த விஷயத்தை பற்றியே சிந்தித்து கொண்டிருப்பது, கவலையில் இருந்து மீள முடியாமல் தவிப்பது, தேவையற்ற மன அழுத்தத்துக்கு ஆளாவது போன்ற பாதிப்புகள் மனநோய்க்கு காரணமாகி விடும். மனநல பிரச்சினைகளை உடனடியாக கவனத்தில்கொள்ளவேண்டும். அதில் அலட்சியமாக இருந்தால் பாதிப்புகள் அதிகமாகிவிடும்.

    பீதி அடைவது, பதற்றத்திற்கு ஆளாவது, மனம் வெறுமையாக இருப்பது போன்ற உணர்வுக்கு ஆட்படுதல், மார்பு வலி, உடல் சூடாவது அல்லது குளிர்ச்சி அடைவது போன்ற அறி குறிகள் தென்பட்டால் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம். அதனால் பீதி அடையக்கூடாது. வியர்த்தல், தலைச்சுற்று, தலைவலி, இதயம் சத்தமாக துடிப்பது, மூச்சுவிட சிரமம், தசைகள் இறுக்கமடைதல், வயிற்று போக்கு, வயிற்று கோளாறு, நடுக்கம், அடிக்கடி சிறுநீர் கழிப்பது போன்ற அறிகுறிகளும் சிலருக்கு வெளிப்படக்கூடும். மனதை பாதிக்கும் சம்பவங்கள் நடக்கும்போது இதுபோன்ற அறிகுறிகள் தொடர்ந்து நீடித்தால் மன நல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமானது.

    மனதில் நிலைகொண்டிருக்கும் கவலை தீவிரமாக மாறும்போது ஆரோக்கியத்தை பாதிக்கும். மன அழுத்தத்தால் பாதிக்கப்படும்போது கவலை தீவிரமடைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

    பலவகையான கவலைகள் குறித்தும் அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தும் பார்ப்போம்!

    பொதுவான கவலை: அன்றாடம் செய்யும் பணிகளில் ஏதேனும் சிக்கல்களை எதிர்கொள்ளும்போது இந்த வகையான கவலை உருவாகலாம். ஏதாவதொரு குறிப்பிட்ட பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பதற்கு காலதாமதம் ஏற்படும்போது கவலையின் தன்மையும் வீரியமடையக்கூடும். சில சமயங்களில் ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேலும் கூட இத்தகைய கவலை நீடிக்கலாம்.

    கட்டுப்பாடற்ற கவலை: மனதில் உதிக்கும் தேவையற்ற சிந்தனையால் இந்த கவலை உண்டாகிறது. சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் கவலைப் படுவது வாடிக்கையாகிவிடும். அதனால் புதுப்புது கவலைகள் தோன்றிக்கொண்டே இருக்கும். மன ஆரோக்கியமும் வெகுவாக பாதிப்புக்குள்ளாகும். இந்த கவலைக்கு ஆளாகுபவர்கள் அடிக்கடி கைகளை கழுவிக்கொண்டிருக்கும் நிர்பந்தத்திற்கு உள்ளாகுவார்கள்.

    சமூக கவலை: மற்றவர்களுக்கு முன்னால் அவமானப்பட வேண்டிய சூழல் உருவாகி விடுமோ, என்ற பயம் ஏற்படும்போது இந்த கவலை உண்டாகிறது. இதனை சமூக பயம் என்றும் அழைக்கலாம். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நிறைய பேர் கூடி இருக்கும் இடத்தில் சிறிது நேரம் நிற்பதற்கே தயங்குவார்கள். கூச்ச சுபாவமும் கொண்டிருப்பார்கள். சமூக கூட்டங்களில் பங்கேற்பதை தவிர்ப்பதற்கு முயற்சிப்பார்கள். சிலருக்கு சமூக கவலை வாழ்நாள் ழுழுவதும் இருக்கலாம்.

    அதிர்ச்சிக் கவலை: மனதை பாதிக்கும் சம்பவம் அல்லது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நிகழ்வு நடைபெறும்போது மனம் அதிர்ச்சிக்குள்ளாகும். அதில் இருந்து மீண்டு வருவதற்கு சில நாட்களாகும். அந்த சமயத்தில் பழைய சோக சம்பவங்களை நினைவுக்கு கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். மன அதிர்ச்சியில் இருந்து மீள காலதாமதமானால் மனம் தவிப்புக்குள்ளாகும். அதே நிலை நீடித்தால் மன ஆரோக்கியம் நிரந்தரமாக பாதிப்புள்ளாகிவிடும். மனம் நிச்சயமற்ற நிலைக்கு மாறிவிடக்கூடும்.

    பீதி: பதற்றத்தின் காரணமாக மனம் பீதியடைகிறது. அப்போது இதயத் துடிப்பு அதிகரித்தல், மூச்சு திணறல், நெஞ்சு வலி போன்றவற்றை அனுபவிக்கக்கூடும். அடிக்கடி இதுபோன்ற சூழ்நிலையை மனம் எதிர்கொள்வதற்கு இடம் கொடுக்கக்கூடாது. மன கவலை நீண்ட நேரம் நீடித்தால் மன அழுத்தத்தை சீராக்கும் ஹார்மோன் வெளியாகக் கூடும். ஆனால் தொடர்ந்து மன கவலை நீடித்தால் தலைவலி, தலைச்சுற்றல் போன்ற பக்கவிளைவுகளையும் அனுபவிக்க வேண்டி யிருக்கும்.

    ஒருவர் மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ அச்சுறுத்தலை அனுபவிக்கும்போது அதனை சமாளிக்கும் விதத்தில் மூளையின் செயல்திறன் அமைந்திருக்கும். அப்போது நரம்பு மண்டலத்தில் வெளியாகும் ஹார்மோன் மன அழுத்தம், பதற்றத்தை போக்குவதற்கு துணைபுரியும். ஆனால் தொடர்ந்து மனம் சார்ந்த பிரச்சினையை எதிர்கொண்டால் நரம்பு மண்டலத்தில் சமநிலையற்ற நிலை உருவாகக்கூடும். அதன் காரணமாக உடல் எடை அதிகரிப்பு, நீண்டகால ஆரோக்கிய குறைபாடு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.
    Next Story
    ×