search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குடும்ப உறவுகள் விலகி விடாமல் காக்கும் சம்பிரதாயங்கள்
    X
    குடும்ப உறவுகள் விலகி விடாமல் காக்கும் சம்பிரதாயங்கள்

    குடும்ப உறவுகள் விலகி விடாமல் காக்கும் சம்பிரதாயங்கள்

    குடும்ப உறவுகள் விலகி விடாமல், காலம் காலமாக தொடர வேண்டும் என்பதற்காகவே முன்னோர்கள் இதுபோன்ற சில சம்பிரதாயங்களை வகுத்துள்ளனர். இது உலகைக் கவர்ந்த நமது பண்பாடாகும்!
    பெண்களிடம் பாசம் காட்டுவதில்தான் சமூக பண்பாடு உறுதிசெய்யப்படுகிறது. பாசம்காட்டும் அந்த பண்பாடு ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் தொடங்குகிறது. பெண் திருமணமாகி கணவர் வீட்டுக்கு சென்ற பின்பும், பிறந்த வீட்டினர் அவளை மறக்காமல் இருப்பதுதான் தமிழகத்தின் சமூக பண்பாடு. அனைத்து விசேஷங்களுக்கும் அவளை குடும்பத்தோடு பிறந்த வீட்டுக்கு அழைத்து வருகின்றனர். மணமாகி சென்றாலும் பெண்ணுக்கு குடும்பம் ஆதரவாக இருக்கிறது என்பதை, அவளின் கணவர் வீட்டினருக்கு புரிய வைக்கும் வகையில் அந்த பண்பாடு அமைகிறது. அது அந்த பெண்ணுக்கும் தன்னம்பிக்கையை அளிக்கும்.

    திருமணம், வளைகாப்பு, குழந்தை பிறப்பு, காதுகுத்து, மஞ்சள் நீராட்டு.. என அடுத்தடுத்து நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பிறந்த வீட்டின் சொந்தங்கள் அவளோடு கூடி மகிழ்வார்கள். அதற்கு ஏற்றார்போல் பெண்களும், உடன்பிறந்த அண்ணன், தம்பிகளை கணவரிடமோ அல்லது கணவரின் வீட்டாரிடமோ ஒருபோதும் விட்டுக் கொடுப்பதில்லை.

    பெண்ணின் வாழ்வில் முக்கியமான நிகழ்வு குழந்தைப் பிறப்பு. அப்போது அவள் தனது தாய் வீட்டில் இருக்க வேண்டும் என்றே நினைப்பாள். பிறந்த வீட்டு சொந்தங்கள் அனைத்தும் அங்கே இருப்பதே அதற்கான காரணம். குழந்தை பிறந்த உடன் முதலில் தெரிவிக்க வேண்டிய நபர்களில் தாய்மாமனும் ஒருவர். அதனால் புதிய வரவான குழந்தையின், பச்சிளம் பருவத்தில் இருந்தே தாய்மாமன் உறவு தொடங்கி விடுகிறது.

    குடும்ப உறவுகளில் தாய் மாமன் உறவு என்பது ஆழமானது. அது குழந்தையின் தாயை பொறுத்தே அமையும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு குழந்தைக்கு தொட்டில் கட்டும் வழக்கம்.

    இப்போதெல்லாம் மர தொட்டில், ஸ்பிரிங் தொட்டில் என பலவகையான தொட்டில்கள் வந்து விட்டன. முன்பெல்லாம் வெள்ளை கயிறு, பல வண்ணங்களுடன் கூடிய தொட்டில் கம்பு, வெள்ளை வேட்டியில் கட்டப்படும் தொட்டில்களே அதிகம். இப்போதும் அதை பல இடங்களில் காண முடியும். இந்த தொட்டிலில் இருந்துதான் குழந்தைக்கும், தாய்மாமனுக்கும் இடையேயான பந்தம் தொடங்குகிறது.

    சகோதரிக்கு பிறக்கும் குழந்தைக்கு, குழந்தையின் தாய்மாமன் தொட்டில் வாங்கி கொடுக்க வேண்டும். இதை ஒரு சம்பிரதாயமாக இல்லாமல், உறவை பலப்படுத்த ஏற்படுத்திய யுக்தி என்றே சொல்லலாம். குழந்தைக்கு தாய் மாமன் தொட்டில் கட்டுவதற்கு வேட்டி, தொட்டில் கம்பு, தொட்டில் கட்டும் கயிறு, வெள்ளிச் சங்கு போன்று முதல் குழந்தைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி கொடுப்பார். பிற பொருட்களை தான் மற்றவர்கள் வாங்கிக் கொடுப்பதுண்டு. தாய்மாமன் வாங்கி கொடுக்கும் வேட்டியில் குழந்தைக்கான முதல் தொட்டிலை கட்டுவார்கள். தற்போதும் பல கிராமங்களில் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. தாய்மாமன் தொட்டில் தரும்வரை குழந்தைக்கு வேறு தொட்டில் கட்ட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    குழந்தையின் தாய்மாமன் வேலைக்காக வெளியூருக்கு சென்று விட்டாலும், குழந்தையை பார்க்க ஒரு சில நாட்களில் வரவேண்டும் என பெரியோர்கள் அறிவுறுத்துவார்கள். சகோதரி தனக்கு கொடுத்த அன்பு, மரியாதையை அந்த குழந்தை மீது தனது கடைசி காலம் வரை தாய்மாமன் வைத்திருப்பான். ஒரு தொட்டிலில் உருவாகும் இந்த பந்தம், அந்த குழந்தையின் காலம் வரை நீடிக்கும்.

    குடும்ப உறவுகள் விலகி விடாமல், காலம் காலமாக தொடர வேண்டும் என்பதற்காகவே முன்னோர்கள் இதுபோன்ற சில சம்பிரதாயங்களை வகுத்துள்ளனர். இது உலகைக் கவர்ந்த நமது பண்பாடாகும்!
    Next Story
    ×