search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கணவர் உண்டு.. ஆனால்.. தாம்பத்யம் இல்லை.
    X
    கணவர் உண்டு.. ஆனால்.. தாம்பத்யம் இல்லை.

    கணவர் உண்டு.. ஆனால்.. தாம்பத்யம் இல்லை.. பெருகிவரும் சைபர் விதவைகள்

    கணவர் தொடர்ந்து பொய் பேசினால் அவர்மீது கவனம் செலுத்துங்கள். சொல்வது சிறிய பொய்யாக இருந்தாலும், அதை சொல்ல என்ன காரணம் என்று கேட்டு மனம்விட்டுப் பேசுங்கள்.
    சுஜாதாவுக்கு திருமணமாகிவிட்டது. கணவரும், அவளும் ஒரே வீட்டில்தான் வசிக்கிறார்கள். இருவரும் வேலைக்கு செல்கிறார்கள். அவர்கள் முகம்பார்த்து பேசி பல வாரங்கள் ஆகிவிட்டன. `அவர் என்னை வாய்க்கு வந்தபடி திட்டினால்கூட நான் வருத்தப்படமாட்டேன். அப்படி திட்டும்போதாவது நானும், அவரும் சில விஷயங்களை பகிர்ந்துகொள்ளலாம் அல்லவா. ஒரு பெண்ணால் எதை வேண்டுமானாலும் தாங்கிக்கொள்ள முடியும். ஆனால், கணவர் பேசாமலே புறக்கணிப்பதை தாங்கிக்கொள்ளவே இயலாது' என்று கண்ணீர் விடுகிறார், அவர்.

    இப்படி ஒருசில சுஜாதாக்கள் அல்ல, பல்லாயிரம் சுஜாதாக்கள் நம்மோடு இருக்கிறார்கள். அவர்கள் கணவரால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு பெயரளவுக்கு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். கணவர் உண்டு.. ஆனால் (வாழ்க்கை) இல்லை.. என்ற நிஜமே அவர்களுக்குள் நிலவிக்கொண்டிருக்கிறது.

    சமீபத்தில் மனநல நிபுணரிடம் ஆலோசனை பெற்று வந்திருக்கும் சென்னையை சேர்ந்த சீமா, ‘‘எனது கணவர் இன்டர்நெட்டுக்கு அடிமையாகி விட்டார். எத்தனையோ விதங்களில் அதை எடுத்துச்சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை. கணவருடன் ஒரே வீட்டிற்குள் வசித்தாலும், (இன்டர்நெட்டால்) நான் விதவையை போன்று வாழ்ந்துகொண்டிருக்கிறேன்’’ என்கிறார். இவரை போன்று குமுறும் பெண்கள் ஏராளம்!

    ‘‘நானும், என் கணவரும் வெவ்வேறு அலுவலகங்களில் வேலைசெய்கிறோம். வேலையின் பரபரப்பு இருவரிடமுமே உண்டு. காலை ஒன்பது மணிக்கு அலுவலகத்திற்கு கிளம்பினால் இரவுதான் திரும்புவோம். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வரை, அவரது அலுவலகத்தில் இருந்து திரும்பும்போது என் அலுவலகத்திற்கு வந்து காத்திருந்து என்னையும் வீட்டிற்கு அழைத்துவருவார். பின்பு அதற்கு நேரமில்லை என்று அவர் சொன்னதால் நான் வேறு வாகனம் வாங்கி தனியாக அலுவலகத்திற்கு சென்று வருகிறேன்.

    வீட்டிற்கு வந்தால் இரண்டொரு வார்த்தைகள் பேசுகிறார். பின்பு இன்டர்நெட்டில் மூழ்கிவிடுகிறார். பேஸ்புக்கிலோ, சாட் ரூமிலோ பொழுதை கழிக்கிறார். ஆன்லைனில் அடிக்கடி ஷாப்பிங்கும் செய்கிறார். பேஸ்புக்கில் அவரது புரோபைலுக்கு நானும் ரெக்வெஸ்ட் அனுப்பினேன். அப்படியாவது கணவரோடு பேச்சுத் தொடர்பில் இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் அவரை கண்காணிக்க நான் ரெக்வெஸ்ட் அனுப்புவதாக கூறி நிராகரித்துவிட்டார்.

    ஒரே வீட்டில் ஒன்றாக வசித்தாலும், அவர் என்னுடன் அத்தியாவசிய தேவைக்குகூட பேசாமல் இருப்பதை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. எனது தோழிகள் எல்லாம் அலுவலக டென்ஷனை வீட்டில் கணவரிடம் பகிர்ந்து தீர்த்துக்கொள்கிறார்கள். ஆனால் எனக்கு டென்ஷனே வீட்டில்தான் உருவாகிறது. என் கணவர் நெட்டில் வெகுநேரத்தை செலவழித்துவிட்டு ரொம்ப தாமதமாக தூங்குகிறார். அதையே காரணங்காட்டி மறுநாள் தாமதமாக விழிக்கிறார். பெயரளவுக்கு வாழும் இந்த வாழ்க்கை எனக்கு தேவையில்லை. கணவர் உயிருடன் இருக்கும்போதே என்னால் விதவை போன்று வாழ முடியாது. ஆன்லைன் நண்பர்களோடு அவர் விருப்பம்போல் வாழட்டும்’’ என்று, பெங்களூருவை சேர்ந்த ஸ்டெல்லா சீறுகிறார்.

    கணவரின் இன்டர்நெட் மோகத்தால் பாதிக்கப்படும் இத்தகைய பெண்கள் `சைபர் விதவைகள்' என்று அழைக்கப்படுகிறார்கள். கணவரிடம் இருந்து இவர்களுக்கு மனோரீதியான பங்களிப்போ, உடல்ரீதியான பங்களிப்போ கிடைப்பதில்லை. கிடைத்தாலும், அது பெயரளவுக்கே கிடைக்கிறது. அதில் அவர்களுக்கு எந்த மகிழ்ச்சியும் இல்லை.

    இதில் குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயம் என்னவென்றால் இன்டர்நெட்டில் மூழ்கி, தனிப்பட்ட வாழ்க்கையை தொலைக்கும் திருமணமான ஆண்களை பற்றிய முழுமையான புரிதல் அவர்களது குடும்பத்தினருக்கோ, சமூகத்திற்கோ இல்லை. தனது கணவர் குடிப்பழக்கம் கொண்டவர் என்று ஒரு பெண் சொன்னால், அதனால் ஏற்படும் பாதிப்பு என்ன என்பதை சமூகம் புரிந்திருக்கிறது. குடும்பத்தில் உள்ள பெரியவர்களும் உணர்ந்திருக்கிறார்கள். தன் கணவர் இன்டர்நெட்டில் மூழ்கிக்கிடக்கிறார் என்று அவள் தனது மாமனார்- மாமியாரிடம் சொன்னால் `அவன் வீட்டில்தானே இருக்கிறான். வெளியே எங்கேயாவது சென்றால்தானே எங்களால் தட்டிக்கேட்க முடியும். இதை எல்லாம் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளாதே' என்று கூறிவிடுகிறார்கள். பிரச்சினையின் ஆழத்தை புரியாமல் பெரியவர்களே மேம்போக்காக நடந்துகொள்வது பெண்களுக்கு கூடுதல் கவலையளிக்கிறது.

    கடந்த ஐந்தாண்டுகளில் நடந்த விவாகரத்துகளை கணக்கிட்டால், அவற்றில் 30 சதவீதத்திற்கு இன்டர்நெட்டில் மூழ்கிக்கிடப்பது காரணமாக சொல்லப்பட்டிருக்கிறது. இது வழக்குதொடுத்த பெண்களின் எண்ணிக்கை மட்டுமே. சகித்துக்கொண்டு கணவரின் வீட்டிலேயே தனிமரமாக வசிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இரண்டையும் சேர்த்தால் சதவீத கணக்கு மளமளவென உயர்ந்துவிடும்.

    அம்மா, அப்பா, மனைவி, பிள்ளைகளிடம் சில நிமிடங்கள்கூட பேச தயங்கும் இன்றைய ஆண்களில் பலர் மணிக்கணக்கில் இன்டர்நெட்டில் மூழ்கிக்கிடக்கிறார்கள் என்பது கவலைக்குரிய விஷயமாகும். பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்யவே பரபரத்துக் கொண்டிருக்கும் அவர்களது எதிர்காலம் என்னவாகும் என்பது கேள்விக்குறியாகத்தான் இருந்துகொண்டிருக்கிறது.

    இன்றைய நடுத்தர வயதுக்காரர்களின் இரவு உலகம் வித்தியாசமானதாக இருக்கிறது. பழைய பள்ளி, கல்லூரித் தோழமையோ- பஸ், ரெயிலில் கிடைக்கும் தோழமையோ சமூகவலைத்தளங்கள் வழியாக பலரது இரவு நேரத்தை அபகரித்துக்கொள்கிறது. அதில் சிக்கிக்கொள்ளும் ஆண்கள் அருகில் இருக்கும் தனது மனைவியின் தனிமையையோ, ஏக்கத்தையோ, எதிர்பார்ப்புகளையோ நினைத்துப்பார்ப்பதே இல்லை. அடுத்தவர்களோடு ஆன்லைன் இரவு உலகத்தில் வலம் வருகிறவர்களால் திருமணத்திற்கு பிந்தைய முரண்பாடான உறவுகள் தோன்றிவிடுகின்றன.

    போட்டோ வழியாக ஒரு லைக்கிலும், கமெண்ட்டிலும் உருவாகும் பந்தங்கள் மெல்ல மெல்ல போன் தொடர்புகளுக்கும், போன் செக்ஸூக்கும் துணைபுரிகின்றன. தடம்மாறிச்செல்லும் இத்தகைய ஆண்களை சகித்துக்கொண்டு பிள்ளைகளுக்காகவும், சமூகத்திற்காகவும் பல பெண்கள் பொருந்திப்போய்க் கொண்டிருக்கிறார்கள். வீட்டில் நான்கு சுவர்களுக்குள் கண்ணீரோடு தனித்தீவில் இருப்பதுபோல் ஏராளமான சைபர் விதவைகள் வாழ்ந்து வருகிறார்கள்.

    சைபர் விதவையாக வாழ்ந்துவரும் மும்பையை சேர்ந்த ஒரு பெண் தனது சோக கதையை சொல்கிறார்:

    ‘‘எங்களுக்கு திருமணம் நடந்து 15 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. எங்கள் இரண்டு பிள்ளைகளும் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். என் கணவர் சுயதொழில் செய்துவருகிறார். அவர் தொழிலில் பரபரப்பாக இருந்தாலும் வீட்டிற்கு வந்த பின்பு போன் அழைப்புகளை கண்டுகொள்ளமாட்டார். பிள்ளைகளோடும், என்னோடும் பேசிக்கொண்டிருப்பார். நாங்கள் அனைவரும் ஒன்றாக இரவு உணவு சாப்பிடுவோம்.

    அவரது அலுவலகத்திலும், வீட்டிலும் கம்ப்யூட்டரும் நெட் கனெக்‌ஷனும் உண்டு. வீட்டில் உள்ள கம்ப்யூட்டரை அவரும், பிள்ளைகளும் பயன்படுத்துவார்கள். எனக்கு அதில் ஆர்வம் கிடையாது. குழந்தைகளுக்கும் பயன்படும் என்று கூறிக்கொண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு லேப்டாப் ஒன்றை வாங்கினார். ஆனால் அதன் அருகில்கூட குழந்தைகளை விடுவதில்லை. எப்போதும் அதை அவரது அறைக்குள் வைத்துக்கொள்வார்.

    அன்று இரவு அவர் லேப்டாப்புடன் இருந்த அறைக்குள் நான் திடீரென்று சென்றுவிட்டேன். அங்கு நான் பார்த்த காட்சி என்னை அதிரவைத்துவிட்டது. அவர் ஹெட்செட் மாட்டியிருந்தார். மைக்ரோபோனில் மிக மெல்லிய குரலில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். வீடியோ சாட்டிங்கில் இருக்கிறார் என்பது தெரிந்தது. ஸ்கிரீனில் ஒரு பெண் நிர்வாணமாக நின்றிருந்தாள். அவர்கள் இருவரும் பரஸ்பரம் பார்த்துக்கொண்டு ஏதேதோ செய்துகொண்டிருந்தார்கள்.

    நான் பின்னால் நிற்பதை பார்த்ததும் அவர் திடுக்கிட்டு, லேப்டாப்பை மூடிவைத்துவிட்டு உடலை துணியால் போர்த்திக்கொண்டு குதித்து எழுந்தார். நடந்ததை எல்லாம் நினைத்துப்பார்த்தபோது இந்த உலகமே நொறுங்கி என் தலையில் விழுவதுபோல் இருந்தது. அப்படியே அந்த லேப்டாப்பை தூக்கிப்போட்டு உடைத்துவிடலாம் என்று நினைத்து அதை தூக்கினேன். ஆனாலும் சத்தம்கேட்டு குழந்தைகள் வந்துவிடுவார்கள் என பயந்து, அதனை படுக்கையிலே போட்டுவிட்டு தலையில் அடித்துக்கொண்டு அழுதேன்.

    நான் பார்த்த காட்சி அனைத்தையும் என் குடும்பத்தாரிடமும், மாமனார்- மாமியாரிடமும் விளக்கிசொன்னேன். ஆனால் அவரோ என்னை குறைகூறி, பிரச்சினையை திசைதிருப்புகிறார். அதாவது நான் சந்தேக புத்திகொண்டவள் என்றும், அவர் பார்த்துக்கொண்டிருந்தது ஒரு நடிகையின் போட்டோ என்றும் கூறி எல் லோரையும் நம்பவைத்துக்கொண்டிருக்கிறார்’’ என்று அழுகிறாள், அந்த பெண்.

    குடும்பத்தைலைவிகள் சைபர் விதவைகளாக உருவாகுவதை தவிர்க்கவேண்டும் என்றால், அவர்களது கணவர்கள் சைபர் அடிமையாகிவிடாத அளவுக்கு கவனித்துக்கொள்ள வேண்டும். சைபர் அடிமைகளை கண்டறிவது எப்படி தெரியுமா?

    அலுவல் காரணம் எதுவும் இன்றி சமூக வலைத்தளங்களிலோ, சாட் ரூமிலோ ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நேரத்தை செலவிட்டால் அவரை கண்காணியுங்கள். அதிக நேரத்தை அதில் செலவிட்டால் அது தாம்பத்ய வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும். சாட்டிங்கில் அதிக ஆர்வம் கொண்டவர்கள் இரவில் வெகுநேரம் நெட்டை பயன்படுத்துவார்கள். அவர்கள் பயன்படுத்தும் லேப்டாப், கம்ப்யூட்டர் போன்றவைகளை தனி இடத்தில்வைத்து தான் மட்டுமே பயன்படுத்துவேன் என்று அடம்பிடிப்பார்கள். தான் செய்வது தவறு என்பது அவருக்கே புரியும் என்பதால் எப்போதும் ஒருவித பயம், பதற்றத்துடன் காணப்படுவார்கள்.

    `நான் மற்றவர்கள் சுதந்திரத்தில் தலையிடுவதில்லை. பிறருடைய செல்போனையோ, கம்ப்யூட்டரையோ நான் திறந்து பார்ப்பதில்லை. அதுபோல் நீங்களும் என் விஷயத்தில் தலையிடக்கூடாது. என்னை சுதந்திரமாக விடவேண்டும்' என்று அவ்வப்போது மறைமுகமாகவோ, நேரடியாகவோ உணர்த்திக்கொண்டே இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களிடம் ஒரு டிடெக்டிவ் போன்று நடந்துகொள்ளாமல், `நாம் இருவரும் கணவன்- மனைவி. நமக்குள் பெரிய அளவில் ரகசியங்கள் இருக்கக்கூடாது' என்று கூறி பக்குவமாக அணுகி, அவர்கள் மனதில் இருப்பதை எல்லாம் மனைவி அறிந்துகொள்ளவேண்டும்.

    கணவர் தொடர்ந்து பொய் பேசினால் அவர்மீது கவனம் செலுத்துங்கள். சொல்வது சிறிய பொய்யாக இருந்தாலும், அதை சொல்ல என்ன காரணம் என்று கேட்டு மனம்விட்டுப் பேசுங்கள். சைபர் அடிமைகளால் தாம்பத்ய தொடர்பில் உற்சாகம் காட்டமுடியாது. அலுவலக வேலை, உடல்நிலை சரியில்லை என்றுகூறி மனைவியுடன் தாம்பத்ய தொடர்பை தவிர்க்க முயற்சிப்பார்கள். அவர்கள் தூங்கும் நேரம் மாறும். இரவில் வெகுநேரம் விழித்திருந்துவிட்டு, மிக தாமதமாக எழுவார்கள். வேலை மற்றும் அவர்கள் செய்யும் தொழிலிலும் கவனம் குறையும். இதனால் அவர்களது திறமை மங்கும்.

    இதுபோன்ற செயல்பாடுகளும், மனோரீதியான தடுமாற்றங்களும் உங்கள் கணவரிடம் இருந்தால், உடனே அவரை சைபர் அடிமை என்று முத்திரைகுத்திவிட வேண்டாம். அவரது செயல்பாடுகளை ஆராயுங்கள். அவரிடம் மனம்விட்டுப்பேசுங்கள். அன்பாலும், நடத்தையாலும் அவரை உங்கள் பக்கம் ஈர்த்திடுங்கள். இதற்கு மனநல நிபுணர்களின் ஆலோசனையும் கைகொடுக்கும்.
    Next Story
    ×