search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்களே தோல்வியில் இருந்து மீள வேண்டுமா?
    X
    பெண்களே தோல்வியில் இருந்து மீள வேண்டுமா?

    பெண்களே தோல்வியில் இருந்து மீள வேண்டுமா?

    தோல்வி என்பது வெற்றியை சரியான கண்ணோட்டத்தில் அணுகுவதற்கு வழிகாட்டும் என்பார்கள். பெண்களே இனி தோல்வியை சந்திக்காமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்று அறிந்து கொள்ளலாம்.
    தோல்வி என்பது வெற்றியை சரியான கண்ணோட்டத்தில் அணுகுவதற்கு வழிகாட்டும் என்பார்கள். இனி தோல்வியை சந்திக்காமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பதை கற்றுக்கொடுக்கும். ஒருசிலருக்கு வாழ்க்கையில் நடப்பது எல்லாமே எதிர்மறை விஷயங்களாகவே தோன்றும். அதுபோல் தோல்வி நிரந்தரமாகி விடாது. தோல்வியை எதிர்கொள்பவர்கள் அந்த கடினமான காலகட்டத்தில் இருந்து மீண்டு வருவதற்கு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது முக்கியம். அதற்கான முக்கிய வழிகாட்டுதல்கள் குறித்து பார்ப்போம்.

    ஏதாவது ஒரு விஷயத்தை செய்து கொண்டிருக்கும்போது இடையூறு ஏற்படும். இனி அதனை செய்து முடிக்க முடியாது என்ற நிலை உருவாகும். அப்போது கடும் வருத்தம் உண்டாகும். கவலை, பதற்றம், பயம், கோபம், சோகம் இவற்றுள் ஏதாவது ஒருசில உணர்வுகள் மனதை வாட்டும். அந்த உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். வலியையும், வேதனையும் முழுமையாக மனம் உணர்வதற்கு அனுமதிக்க வேண்டும். அடுத்த முறை ஒரு செயலை செய்யும்போது இடையூறு ஏற்பட்டால் அப்போது வெளிப்படும் உணர்ச்சிகளை கையாளுவதற்காக செயல்முறையை வகுக்க வேண்டும். என்னென்ன பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தது? எத்தகைய மனத்துயரங்களை எதிர்கொள்ள நேர்ந்தது என்பதை நோட்டில் எழுதி வையுங்கள். அவை அடுத்த முறை வெற்றியை தேடித்தருவதற்கு வழிகாட்டும்.

    பெரும்பாலும் உணர்ச்சிவசப்படும்போது உடல் உடனடியாக நமது உணர்வுகளை வெளிக்காட்டும். ஆதலால் தலையில் இருந்து கால் வரை உடல் உறுப்புகளை மனத்திரையில் ஸ்கேன் செய்யுங்கள். தோல்வி அடைந்த விரக்தியை வெளிப்படுத்தும்போது கைகளை தளர்வுபடுத்திவிட்டு ஆழமாக சுவாசியுங்கள். வாய் வழியாகவும் சுவாசிக்கலாம். தோல்வியை சகிக்கமுடியாத கோபத்தில் நிறைய பேர் பற்களை கடிப்பார்கள். தாடையை அங்கும் இங்கும் அசைத்து பற்களை உராய்ந்துகொண்டிருப்பார்கள். அந்த சமயத்தில் தசைகளுக்கு ஓய்வு கொடுத்துவிட வேண்டும். நாக்கை வாயின் அடிப்பகுதிக்கு கொண்டு சென்று ஓய்வெடுக்கவிட வேண்டும். கழுத்து, தோள்பட்டை, மார்பு பகுதியில் ஏதேனும் இறுக்கத்தை உணர்ந்தால் மூச்சை ஆழமாக இழுத்துவிட்டு ஓய்வெடுக்க வேண்டும். கால்கள் உணர்வற்ற நிலைக்கு செல்வதை தவிர்க்க கால் விரல்களை அசைத்துக்கொண்டிருக்க வேண்டும். பிடித்தமான நிறத்தை மனத்திரையிலோ, நேரிலோ பார்த்து மனதை இலகுவாக்க வேண்டும்.

    தோல்வி அடையும் சமயத்தில் எதிர்மறை உணர்ச்சிகள்தான் மனதை அலைபாயவிட்டுக்கொண்டிருக்கும். அதனால் அந்த சமயத்தில் வேறு எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்கக்கூடாது. மனதை அமைதிப்படுத்திவிட்டு நிதானமாக இருக்க வேண்டும். ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு தோல்வியை சந்தித்தபோது வெளிப்பட்ட மன உணர்ச்சிகளை எழுதி வைத்த நோட்டை எடுத்து படியுங்கள். ஒவ்வொரு எதிர்மறை சிந்தனைக்கும் நீங்கள் எழுதி இருக்கும் விஷயங்களை படித்து பார்த்துவிட்டு ஆக்கப்பூர்வமாக சிந்தியுங்கள். ‘என்னால் எப்படி தோல்வி அடைய முடிந்தது’ என்று எழுதி இருந்தால், ‘அடுத்த முறை இந்த வீழ்ச்சியை எப்படி எதிர்கொண்டு சாதிக்கலாம்’ என்பது பற்றி எழுதிவையுங்கள். அதன்படி செயல்பட தொடங்குங்கள்.

    எதிர்மறையான சிந்தனைகள், கேள்விகள் தலைதூக்கும்போதெல்லாம் நேர்மறையான பதிலை சொல்வதற்கு முயற்சியுங்கள். ஏற்கனவே செய்து முடித்திருக்கும் நேர்மறையான விஷயங்களை நினைவுப்படுத்திப்பாருங்கள். அவை மன ஆறுதலை தரும். நேர்மறையான சிந்தனை கொண்ட நபர்களுடன் தொடர்பில் இருங்கள். அது துயரத்தை போக்க உதவும்.

    தோல்வியில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று, அடுத்தமுறை அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பதுதான். வாழ்க்கையில் ஏதாவதொரு சூழலில் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் மன உளைச்சலை அனுபவிக்க வாய்ப்புள்ளது. அதற்குத் தயாராக இருக்க பழகிக்கொள்ளுங்கள். அந்த சமயத்தில் மகிழ்ச்சியான தருணங்களை நிழலாடவிடுங்கள். மகிழ்ச்சியான செயல்பாடுகளை பட்டியலிடுங்கள், மனதுக்கு பிடித்தமான பாடல்களை கேட்பது, பாடுவது, புத்தகங்கள் படிப்பது என கவனத்தை திசைதிருப்புங்கள். தோல்வி அடைந்து பின்னர் மீண்டும் வெற்றி பெறும்போது எதிர்கொண்ட சிக்கல்கள், பிரச்சினைகள், அவற்றை எப்படி சமாளித்தீர்கள் என்பது பற்றி நோட்டில் எழுதி வையுங்கள். அடுத்தமுறை தோல்வி அடையும்போது அது வழிகாட்டும். 
    Next Story
    ×